தன்னுடைய மின்ஸ்கூட்டரைக் கவனக்குறைவாக ஓட்டி மூன்று வயது சிறுமியை இடித்ததில் சிறுமி கீழே விழுந்து அவள் தலையில் அடிபட்டது. தன் மின்ஸ்கூட்டரால் சிறுமிக்குக் காயம் விளைவித்த குற்றத்தை முகம்மது லுட்ஃபி ட்ஸாகிர், 18, நேற்று ஒப்புக்கொண்டார்.
சிறுமி தன் அண்ணனுடனும் பணிப்பெண்ணுடனும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று ஈஸ்ட்பாய்ண்ட் மாலுக்குச் சென்றாள். பின்னர் அங்காடி நிலையத்தை விட்டு வெளியேறி, இரு சிறுவர்களும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினர்.
அப்போது அதே பேருந்து நிறுத்தத்தை நோக்கி லுட்ஃபியும் தன் மின்ஸ்கூட்டரைச் செலுத்தியதாகக் கூறப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் பலர் காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தும் லுட்ஃபி தன் மின்ஸ்கூட்டரின் வேகத்தைக் குறைக்கத் தவறியதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மின்ஸ்கூட்டர் மணிக்குக் கிட்டத்தட்ட 17 முதல் 19 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோதும் அது அச்சூழலில் பாதுகாப்பற்ற ஒரு வேகம் என்றும் கூறப்பட்டது.
லுட்ஃபி பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போது அங்கிருந்த சிறுமி மின்ஸ்கூட்டரின் முன்னால் கால் வைத்தாள். அப்போது தன் மின்ஸ்கூட்டரை நிறுத்த முடியாமல் லுட்ஃபி சிறுமிமீது மோதிவிட்டார்.
கீழே விழுந்ததில் சிறுமிக்கு வலது முழங்காலிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன.
சம்பவ இடத்தில் சிறுமிக்கு உதவிய லுட்ஃபி, மருத்துவமனைக்குச் சென்று சிறுமியின் தாயாரையும் சந்தித்து மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருந்தார்.
அதே நாளில் மருத்துவமனையிலிருந்து சிறுமி வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் போலிசாரிடம் புகார் செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
$5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள லுட்ஃபி, கண்காணிப்பு ஆணைக்குத் தகுதிபெறுவது குறித்து நீதிபதி அறிக்கை கோரியுள்ளார். அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படவுள்ளது.

