இல்லாத சகோதரர் பெயரில் மோசடி; டின் பெய் லிங் எச்சரிக்கை

இல்லாத சகோதரர் பெயரில் மோசடி; டின் பெய் லிங் எச்சரிக்கை

1 mins read
737063da-bfb5-4364-8e7f-f97c81d39a96
சந்தேகப்பேர்வழி ஒருவர் தன்னை அவரது சகோதரி என்று கூறி மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சனிக்கிழமை இரவு தன் ஃபேஸ்புக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் பகிர்ந்துகொண்டார். படம்: சாவ் பாவ் -

சகோதரர்களே இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங், தன் சகோதரர் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சந்தேக நபர் மோசடி செய்வதாக சனிக்கிழமை இரவு தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.

திருவாட்டி டின்னின் சகோதரர் என்று கூறும் அந்த நபர், சீனாவில் உள்ள ஒரு முதலீட்டுத் திட்டத்தில் சேர மக்களை ஊக்குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த முதலீட்டுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கூறிய திருவாட்டி டின், பொதுமக்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன் 2017ஆம் ஆண்டில் மக்கள் செயல் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் தாங்கிய போலி ஃபேஸ்புக் பக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்களுள் திருவாட்டி டின்னும் ஒருவர். அடித்தளத் தலைவர்களும் குடியிருப்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் அளித்ததில் பொய்யாக உருவாக்கப்பட்ட இந்த ஃபேஸ்புக் பக்கங்கள் அடையாளம் காணப்பட்டு செயலிழக்கப்படச் செய்தன. இதுபோன்ற மோசடிச் சம்பவங்களில் சீன அதிகாரிகள், குடிநுழைவு மற்றும் சுங்கச்சாவடி ஆணைய அதிகாரிகள், நிறுவன வர்த்தகப் பிரதிநிதிகள் என சந்தேகப் பேர்வழிகள் ஆள்மாறாட்டம் செய்வதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.