மூன்று மாதங்களில் $39,000 பணத்தைத் தவறாகக் கையாண்ட சிற்றுண்டிச்சாலை நிர்வாகி ஒருவருக்கு நேற்று 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
புலாவ் புக்கோம் தீவில் உள்ள அந்த சிற்றுண்டிச்சாலையில் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ஆபர்ட் செபாஸ்டியன் டோனி ஸ்டீஃபன், 47, வேலையில் சேர்க்கப்பட்டார். பிரெஞ்சு உணவுச் சேவை நிறுவனமான 'சொடெக்ஸோ'வின் சிங்கப்பூர் கிளையின் 'ராசா புக்கோம்' சிற்றுண்டிச்சாலையில் உணவு, சேவை நிர்வாகியாக பொறுப்பு வகித்த அவர், சிற்றுண்
டிச்சாலையில் செயல்பட்ட உணவுக் கடைகளிலிருந்து பணத்தை வசூலித்து வந்தார்.
ஆனால், ஒவ்வொரு வாரமும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டிய பணத்தை இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஸ்டீஃபன் கையாடத் தொடங்கினார்.
இவ்வாண்டு மார்ச் 20ஆம் தேதி நிறுவனம் நடத்திய திடீர் கணக்குத் தணிக்கை நடவடிக்கையின்போது ஸ்டீஃபன் பணத்தைக் கையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கடைக்காரர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தைக் காணவில்லை.
அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்டீஃபன் ஜூன் மாதம் முதல் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.

