இங்குள்ள தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் சிலர் கிராப், கோஜெக் நிறுவனங்களின் மாற்றியமைக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தி மோசடி புரிகின்றனர்.
தங்களது அடையாளத்தை மறைப்பது, இருக்குமிடம் குறித்த பொய்யான தகவல்களை வழங்குவது, மாட்டிக்கொள்ளாமல் வாகனச் சேவை பதிவுகளை ரத்து செய்வது, சில வேளைகளில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களை ஓட்டுநர்கள் புரிய இத்தகைய செயலிகள் வகைசெய்கின்றன.
இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட சில ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு சிலர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தி நியூ பேப்பர் நாளிதழ் அறிகிறது.
இது தொடர்பாக அந்த நாளிதழ் மேற்கொண்ட சோதனையில், தனியார் வாடகை கார் நிறுவனங்களின் செயலிகளை ஊடுருவி அவற்றில் மாற்றங்களைச் செய்வதற்கென இணையத்தில் குறிப்பிட்ட நபர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
செயலியில் இந்த மாற்றங்களைச் சொந்தமாக செய்ய தெரியாத ஓட்டுநர்களுக்கு உதவ சிலர் அவர்களின் சேவைகளை விளம்பரப்படுத்துகின்றனர்.
சில ஓட்டுநர்களின் இந்தச் சட்டவிரோத செயல், நேர்மையாக உழைக்கும் பெரும்பாலான ஓட்டுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
பூன் டாட் டான் எனும் ஓட்டுநர் ஒருவர், தமது வருத்தத்தை ஃபேஸ்புக்கில் கடந்த வாரம் பதிவு செய்தார். தம்மைப் போன்ற ஓட்டுநர்கள் பலர் நாள் ஒன்றுக்கு $200 வருவாய் ஈட்ட 12 மணிநேரத்திற்கு மேல் உழைக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாற்றியமைக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் சிலர், குறைவான நேரம் உழைக்கும் அதே வேளையில் கூடுதலாக சம்பாதிக்க முடிவதைச் சுட்டினார்.
செயலிகள் தவறாகப் பயன்
படுத்தப்படும் இந்த விவகாரம் குறித்து தாங்கள் அறிவதாக கிராப், கோஜெக் நிறுவனங்கள் தெரிவித்தன. அத்தகைய நடவடிக்கைகளை மோசடி செயல்கள் என அவை வர்ணித்தன.
இந்த மோசடியைத் தான் கடுமையாக கருதுவதாகக் குறிப்பிட்ட கிராப் பேச்சாளர் ஒருவர், மோசடி தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தன்னிடம் தரவு அறிவியலாளர்கள் இருப்பதாகச் சொன்னார்.
தவறிழைக்கும் ஓட்டுநர்களைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யவும் அத்தகைய மோசடி நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவும் கோஜெக் தயங்காது என அதன் பேச்சாளர் கூறினார்.

