முதியவரைத் தாக்கிய 55 வயது மின்ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு $4,500 அபராதம்

முதியவரைத் தாக்கிய 55 வயது மின்ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு $4,500 அபராதம்

2 mins read
8df718d1-163d-456b-8ce7-59cd95f663d2
தனியார் நடமாட்டச் சாதனத்தில் செல்லும் ஓர் ஆடவர். படம்: ராய்ட்டர்ஸ் -

நடைபாதையில் தமக்கெதிரே நடந்து வந்துகொண்டிருந்த முதியவர்மீது மோதப் பார்த்த மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர், அவரிடம் மன்னிப்புக் கோருவதற்குப் பதிலாக அவரைப் பின்தொடர்ந்து தகாத சொற்களால் திட்டி முகத்தில் குத்தினார்.

நேற்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 55 வயது லிம் கிம் ஜூவிற்கு $4,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஈசூன் ரிங் ரோடு வழியாக திரு எட்வின் யாப் ஹோக் செங், 70, வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் தம்மை நோக்கி மின்ஸ்கூட்டரில் லிம் வருவதை அவர் கண்டார்.

அந்த முதியவரை மோதப் பார்த்தது மட்டுமல்லாமல் லிம் அவரைத் திட்டியதாக அரசாங்க தரப்புத் துணை வழக்கறிஞர் பென் மேத்தியஸ் டான் நீதிமன்றத்தில் கூறினார். லிம்மின் செயலைப் புறந்தள்ளிவிட்டு திரு யாப் நடந்து சென்றார்.

இருப்பினும், திரு யாப் வசிக்கும் புளோக் வரை அவரைப் பின்தொடர்ந்த லிம், புளோக்கின் மின்தூக்கி நிறுத்துமிடத்தில் திரு யாப்பை தள்ளிவிட்டார். இதனால் நிலை தடுமாறிய திரு யாப், அஞ்சல்பெட்டி மீது மோதியதில் அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது.

அதோடு திரு யாப்பின் மூக்கில் குத்திய லிம், போலிசை அழைக்குமாறு திரு யாப்புக்கு சவால் விடுத்தார். அதையடுத்து அதிகாரிகளிடம் திரு யாப் புகார் அளித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மருந்தகத்திற்குச் சென்ற திரு யாப்புக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது மூக்கில் சிறியளவு வீக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது.

முதியவரிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட லிம்முக்கு குறைந்தது $5,000 அபராதம் விதிக்குமாறு மாவட்ட நீதிபதி ஹமிடா இப்ராஹிம்மிடம் வழக்கறிஞர் பென் கேட்டுக்கொண்டார்.