சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) இன்று அதிகாலை பாடாங் திடலில் பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டது. 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் பயிற்சியில் மொத்தம் 42 அவசர சேவை வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தீ மற்றும் ரசாயனத் தாக்குதலின்போது படையின் ஆயத்த நிலையைச் சோதனை செய்வதே இந்தப் பாவனை பயிற்சியின் நோக்கம் என்று எஸ்சிடிஎஃப், ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய இந்தப் பாவனைப் பயிற்சி, அதிகாலை 4 மணிக்கு முடிந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது.
பாடாங்கில் பார்வையாளர்களாக நடித்த சிலர், உடல்நல உபாதையின் காரணமாக மயங்கி விழுவது போன்ற ஒரு பாவனை சம்பவத்தில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி செய்வதைக் காட்டும் படங்களை எஸ்சிடிஎஃப் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.
'ஹெஸ்மட்' எனப்படும் மிக அபாயகரமான பொருட்களை அப்புறப்படுத்தும் அதிகாரிகளும் பயிற்சியில் பங்கேற்றனர். சிங்கப்பூர் போலிஸ், தற்காப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவை இந்தப் பயிற்சியை ஆதரிக்கின்றன.
"எங்களது செயல்திட்டங்களையும் பதில் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளையும் புதுப்பிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன," என்று எஸ்சிடிஎஃப் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

