பொதுமக்களிடமிருந்து எந்தச் சமயத்தில் எந்த வகையான செயல்களுக்கு அடையாள அட்டை விவரங்களைப் பெற முடியும் என்பதை விளக்கும் வழிகாட்டி புத்தகம் ஒன்று பாதுகாப்பு அதிகாரிகளுக்காக நேற்று வெளியிடப்பட்டது.
அந்த வழிகாட்டியில் விரைவில் நடைமுறைக்கு வரும் தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
அத்துமீறி நுழைவது போன்ற குற்றச்செயல்களுக்காக தனிப்பட்ட நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தும்போது சந்தேக நபர்களின் அடையாள அட்டை விவரங்களைப் பெறுவது, பயன் படுத்துவது, வெளியிடுவது தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் செயலாகும்.
அதே சமயத்தில் தரவு நிலையங்கள் அல்லது வங்கிப் பெட்டகங்கள் உள்ளிட்ட மிகவும் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு வரும் வருகையாளர்களின் அடையாள அட்டை விவரங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பெற முடியும் என்று வழிகாட்டி தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
அப்போது புதிய வழிகாட்டிப் புத்தகம் அதிகாரபூர்வமாக வெளி யிடப்பட்டது.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து அடையாள அட்டை விவரங்களைப் பெறுவது, பயன்படுத்துவது, வெளியிடுவது, அடையாள அட்டைகளைப் பிரதிகள் எடுப்பது சட்டப்படி குற்றமாகும்.
தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடையாள அட்டை எண், பிறப்புச் சான்றிதழ் எண், 'FIN' எண், வொர்க் பர்மிட் எண் போன்ற தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை பாதுகாப்பு நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத அமைப்பு களுடன் தனிநபர் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும் தவறாகும்.
மேலும் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது அதிகாரிகளால் திரட்டப் படும் தகவல்களை சட்டம் அல்லது வர்த்தக நோக்கத்திற்கு அல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை சூழ்நிலை மேம்பட்டிருப்பதைச் சுட்டிக்காட் டினார்.
கடந்த ஆண்டு அதிகமானவர்கள் குறைவான அளவில் மிகை நேர பணியில் ஈடுபட்டதை புள்ளி விவரங்கள் காட்டுவதாகவும் அவர் சொன்னார்.
வேலை நியமனச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான மிகை நேரம் உட்பட ஒரு நாளுக்கு மொத்த வேலை நேரம் 12 மணி நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
ஒரு மாதத்திற்கு மிகை நேர வேலை 72 மணி நேரத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது.

