இஸ்தானா பூங்காவில் பொம்மை கையெறி குண்டை கண்டுபிடித்த துப்புரவாளரான இளங்கோவன் மாரிமுத்துவுக்கு விநோதமான எண்ணம் ஏற்பட்டது.
இதை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்தால் என்ன நடக்கும் என்று அவர் சிந்தித்தார்.
அதன்படியே அந்தப் பொம்மை கையெறி குண்டை அனைவரது பார்வையில் படும்படி வைத்தார்.
ஆனால் அவரது எண்ணத்திற்கு மேலாக விபரீதமான சம்பவங்கள் நடைபெற்றன.
2017ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 3ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் நடந்த சம்பவத்தில் பொம்மை கையெறி குண்டை கண்ட வாகன மோட்டி ஒருவர் அதை உண்மை என நம்பி போலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதனால் பல்வேறு பிரிவுகளிலிருந்து 36 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் உயிரியல், கதிரியக்க, வெடிமருந்தை செயலிழக்கச் செய்யும் பிரிவிலிருந்து சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் எட்டு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அருகிலிருந்த பினாங்கு லேனின் ஒரு பகுதி 45 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
கையெறி குண்டு போன்று காட்சியளித்த அந்தப் பொருளை அதிகாரிகள் மதிப்பிட்டு கொண்டிருந்த சமயத்தில் பினாங்கு லேன் மேலும் அரை மணி நேரத்திற்கு முழுமையாக மூடப்பட்டது.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான இளங்கோவன் மாரிமுத்து, 59, தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாறன், சம்பவத்தன்று காலை ஏழு மணியளவில் பொம்மை கையெறி குண்டைக் கண்டுபிடித்த இளங்கோவன் அதனை நேராக நிற்கும்படி வைத்திருந்தார் என்றார்.
"பின்னர் அவர் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டார். பிற்பகல் 2.00 மணியளவில் பினாங்கு ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு சந்திப்பில் வந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளில் ஒருவர் கையெறி குண்டை பற்றி போலிசாருக்குத் தகவல் கொடுத்தார். இதனால் தேவையில்லாத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன," என்று வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாறன் சொன் னார்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது பொம்மை கையெறி குண்டை இளங்கோவன் கையாண்ட விதம் போலிசாருக்குத் தெரிய வந்தது.

