சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் முப்பது ஆண்டு காலப் பழமை வாய்ந்த சட்டத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அப்போதுதான் தற்கால, எதிர்கால மிரட்டல்களைச் சமாளிக்கும் ஆற்றலை நாம் உறுதி செய்துகொள்ள முடியும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம், பொது மக்கள் உட்பட அதன் முக்கிய பங்குதாரர்களின் இணக்கத்துடன் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் திரு சண்முகம் கூறினார்.
கொள்கை ஆய்வுக் கழகமும் உள்துறை அமைச்சும் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர், சமூக ஊடகத்தில் வெறுப்புணர்வுப் பிரசாரமும் பிரிவினைவாத நடைமுறைகளும் பிரிவுசார் அரசியலும் அதிகரித்து வருவதைச் சுட்டினார்.
இது குறித்து சமயத் தலைவர்களுடனும் சமயக் குழுக்களுடனும் அரசாங்கம் விரிவாக விவாதித்துள்ளது என்றார் திரு சண்முகம்.
"அவர்கள் அனைவரும் ஒரே மனப்போக்கில் உள்ளனர். நாம் அனைவரும் விரிவான திசையை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் அவர்கள் எல்லாரும் இணக்கம் தெரிவித்தனர்," என்றும் அமைச்சர் விவரித்தார்.
1990ஆம் ஆண்டில் வரையப்பட்ட சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம், 1992ஆம் ஆண்டில், சமயத்தையும் அரசியலையும் பிரித்துக்காட்டும் கொள்கைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
"சமயங்கள் தொடர்பில் அவதூறான கருத்துகள் தெரிவிப்போர் தண்டிக்கப்படுவார்கள் என்பதே அந்தச் சட்டத்தின் முக்கியமான அம்சம்.
"நவீன தகவல் யுகத்தில் வாழும் நாம் அதை ஆற்றல்மிக்க வகையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்," என்றார் அவர்.
அரசியலில் சமய உணர்வு
களைப் பயன்படுத்தும் போக்கைத் தவிர்ப்பதற்கும் இச்சட்டம் வகை செய்கிறது.
ஆகவே, நாம் அந்தக் கடப்பாட்டில் மேலும் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் சட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
1990ஆம் ஆண்டில் இச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதையும் விரிவான விவாதம் நடைபெற்றதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், சட்டத்தின் அம்சங்கள் அனைவராலும் நன்கு புரிந்துகொள்ளப்படுவதற்கு அரசாங்கம் அதிக முயற்சி எடுத்துக்கொண்டது என்றும் அதுபோலத்தான் இப்போதும் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
"சமயக் குழுக்களுடனும் சமயத் தலைவர்களுடனும் நாங்கள் விவாதித்து வருகிறோம். ஆனால் இதில் பங்குதாரர்களான மக்களிடமும் நாம் இதுபற்றி பேச வேண்டும்.
"பின்னர் நாடாளுமன்றத்தில் சட்டத்தின் திருத்தங்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மூலம் மேலும் விவாதங்கள் இடம்பெறும். உலகம் மற்றும் வட்டார நிகழ்வுகளைப் பார்த்தால் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம் என்பது தெளிவாகிறது," என்றும் திரு சண்முகம் வலியுறுத்தினார்.

