செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ஒருவரின் அடையாள அட்டை எண்ணை நிறுவனங்கள் இனி சேகரிக்கவோ, பயன்படுத்தவோ அல்லது வெளியிடவோ முடியாது. பிறப்புச் சான்றிதழ் எண், வெளிநாட்டு அடையாள எண், வேலை அனுமதி அட்டை (வொர்க் பர்மிட்) எண் ஆகியவற்றுக்கும் இந்தப் புதிய விதிமுறை செயல்படுத்தப்படும். ஆயினும், சில சூழ்நிலைகளில் உங்களது அடையாள எண்ணைத் தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்கலாம்.
1. வங்கிகளுக்குள் இருக்கும் காப்பறைகள், தரவு நிலையங்கள், கணினித் தகவல் கட்டமைப்புகள், பாதுகாப்பு செயல்பாட்டு அறைகள் ஆகியவற்றுக்குள் நுழையும்போது உங்கள் அடையாள அட்டையைச் சேகரிக்க, பயன்படுத்த அல்லது வெளியிட அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால், உங்கள் அட்டையிலிருந்து பதிவு செய்யப்படும் தகவல்களைக் காண வருகையாளர்களுக்கும் அனுமதிபெறாத நபர்களுக்கும் அதிகாரம் கிடையாது.
2. வேறு சில சூழ்நிலைகளில் பாதுகாப்பு அதிகாரிகள் உங்களது அடையாள அட்டையைப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் அந்த எண்ணைப் பதிவு செய்ய முடியாது.
பொது இடத்தில் தொந்தரவு அல்லது தொல்லை கொடுத்தல், தனியார் இடத்திற்குள் அனுமதியின்றி உலாவுதல், தனியார் இடங்களில் புகைப்பிடித்தல், வாகன நிறுத்தம் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுதல் ஆகியவற்றுக்காக உங்களை அணுகும் தனியார் அதிகாரிகள், உங்களது அடையாள அட்டையைக் காண்பதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அந்த எண்ணை முழுமையாக எழுதிவைக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
3. காணாமல் போன பொருளைத் திரும்பப்பெற அல்லது வேறொருவரின் பொருளை ஒப்படைக்க வந்திருப்போரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களது அடையாள அட்டையைப் பெற முடியாது.
விதிமுறைகளை மீறி அடையாள அட்டை எண்களைப் பெறுவது தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு இது தொடர்பாகப் புகார் செய்ய விரும்புவோர் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்தை நாடலாம். இந்தச் சட்டத்தை மீறும் நிறுவனங்கள், அதிகாரமின்றி சேகரித்த தகவல்களை அழிக்கக் கட்டாயப்படுத்தப்படும். அத்துடன், ஒரு மில்லியன் வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

