மின்சாரத்தில் இயங்கும் ரிக்ஷாக்களில் முதியோரை சிங்கப்பூர் முழுவதும் அழைத்துச்சென்று, அவர்கள் இயற்கை காற்றைச் சுவாசிக்க வாய்ப்பளிப்பதே "சைக்ளிங் வித்அவுட் ஏஜ்" எனும் லாப நோக்கற்ற அமைப்பின் நோக்கம். ஆனால், அமைப்பின் மூன்று சக்கர ரிக்ஷாக்கள் உந்து நடமாட்டச் சட்டத்தை மீறுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் மே மாதம் அமைப்பிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இம்முனைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நடைபாதைகளில் பயன்படுத்தப்படும் நடமாட்டச் சாதனங்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதற்காக இச்சட்டம் சென்ற ஆண்டு அமலாக்கப்பட்டது.
"சைக்ளிங் வித்அவுட் ஏஜ்" அமைப்பு பயன்படுத்திய மின்-ரிக்ஷாக்களின் எடையும் அகலமும் பொது நடைபாதைகளில் பயன்படுத்தக்கூடிய சாதனங்களுக்கான வரம்புகளை மீறுவதாக ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதன் தொடர்பில் ஆணையத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அமைப்பு தனது தொண்டூழியர்களிடம் தெரிவித்துள்ளது. முதியோருக்கான இலவசப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் தொடங்கிவிடும் என அமைப்பின் தலைமை நிர்வாகி மரீக் பிங்க் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
தாதிமை இல்லங்களோடும் மற்ற அறப்பணி அமைப்புகளோடும் செயல்படும் "சைக்ளிங் வித்அவுட் ஏஜ்" அமைப்பு, நடமாட்டக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் முதியோரைப் பொது நடைபாதைகளிலும் பூங்கா இணைப்புப்பாதைகளிலும் ரிக்ஷா பயணங்களில் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்விக்கிறது. நடைபாதைகளைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதே சமயத்தில், அமைப்பின் மின்-ரிக்ஷா சேவையால் முதியோர் பயனடைய தகுந்த ஏற்பாடு செய்யும் தருவாயில் இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
மின்-ரிக்ஷாக்களை மின்சாரத்தில் அல்லது கையால் இயக்கலாம். ரிக்ஷா பயணத்தின்போது தொண்டூழியர்கள் முதியோருடன் துணை இருப்பார்கள். மணிக்குப் பத்து கிலோமீட்டருக்கு மேற்போகாத மெதுவான வேகத்தில் ஓட்டும்படி அவர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது. நடைபாதைகளில் பயன்படுத்தப்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், மிதிவண்டிகள் ஆகியவற்றுக்கான வேக வரம்பு பிப்ரவரி மாதம் 15 கிலோமீட்டரிலிருந்து 10 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டது. தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்தது இதற்கான முக்கிய காரணம்.
கடந்த ஈராண்டுகளில் மொத்தம் 228 விபத்துகள் நிகழ்ந்தன. 2016ஆம் ஆண்டில் மின்சார மிதிவண்டிகள் சம்பந்தப்பட்ட 54 விபத்துகள் புகார் செய்யப்பட்டன. இது 2015ஆம் ஆண்டின் 39 விபத்துகளைவிட அதிகம்.
"சைக்ளிங் வித்அவுட் ஏஜ்" அமைப்பு மின்-ரிக்ஷாக்களைப் பகிர்வுப் பாதைகளிலும் பூங்கா இணைப்புகளிலும் பயன்படுத்துவதற்குப் பதிலாக மிதிகட்டைகள் கொண்ட ரிக்ஷாக்களைச் சாலைகளில் பயன்படுத்தலாம் என சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவரும் போக்குவரத்து பொறியியல் ஆலோசகருமான கோபிநாத் மேனன் கூறுகிறார்.
"மிதிகட்டைகள் கொண்ட ரிக்ஷாக்களைப் பதிவு செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், அவற்றில் முதியோரை ஏற்றிக்கொண்டு சாலைகளில் செல்லும்போது வெகு கவனமாக இருக்கவேண்டும்," என்றார் அவர்.
இதற்கிடையே, மின்-ரிக்ஷாவில் முதியோரை ஏற்றிச்செல்லும் தொண்டூழியர்களுடன் பாதுகாப்பு கண்காணிப்பாளரும் உடன்செல்ல ஏற்பாடு செய்வது குறித்தும் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் பேசியிருப்பதாக அமைப்பின் திருவாட்டி பிங்க் தெரிவித்தார். இவ்வமைப்பு சேர்ந்து செயல்படும் அறப்பணி அமைப்புகளில் ஒன்று ஸ்ரீ நாராயண மிஷன். சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து ஸ்ரீ நாராயண மிஷனைச் சேர்ந்த சுமார் 135 முதியோர் 83 ரிக்ஷா பயணங்கள் சென்றுள்ளனர்.
"ரிகஷா பயணம் மிகவும் உற்சாகமாக இருந்தது. அந்தக் காலத்திற்குத் திரும்பிச்சென்ற உணர்வு ஏற்பட்டது. நாங்கள் கடலைப் பார்த்தபடி இருந்த இடத்திற்குச் சென்று, காலை சூரிய உதயத்தின்போது நீரலைகளைக் கண்டு ரசித்தோம். இதுபோன்ற இன்னும் பல பயணங்களில் செல்ல விரும்புகிறேன்," என்றார் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் தங்கியிருக்கும் 92 வயது திருவாட்டி வொங் சியூ சிங்.

