கோ சோக் டோங் சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பினார்

கோ சோக் டோங் சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பினார்

1 mins read
44b97229-6413-4e58-9a84-6bacfb879d3a
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள கௌர மூத்த அமைச்சர் கோ சோக் டோங், உணவில் கண்ணுங் கருத்துமாக இருங்கள் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டு தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

கடந்த வாரம் மேற்கொண்ட வழக்கமான ஆண்டு மருத்துவ சோதனையின்போது ரத்த நாளங்கள் சுருங்குவதை அறிந்ததாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த சிகிச்சையில், கை அல்லது இடுப்புக்கும் தொடைக்கும் இடையேயுள்ள அரைப் பகுதியிலுள்ள ரத்த நாளத்தின் ஊடாக மெல்லிதான ஒரு குழாயை மருத்துவர்கள் நாளம் சுருங்கியுள்ள பகுதிக்குச் செலுத்துவார்கள்.

இதன்மூலம், நாளத்தின் அப்பகுதி விரிவாக்கப்பட்டு, ரத்தம் ஓட்டம் சீராகும். "மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டேன். இது ஒரு பொதுவான சிகிச்சை, குறிப்பாக என் வயதிலுள்ளவர்களுக்கு. இப்போது நான் அலுவலகம் திரும்பி விட்டேன்.

ரத்த ஓட்டம் வலுவாக இருப்பதால், முன்பைவிட சிறப்பாகச் செயல்பட எதிர்பார்க்கிறேன்.

இடையில் சில நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டி வந்ததற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்," என்ற அந்தப் பதவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தொடர்ச்சியான மருத்துவ சோதனைக்குச் செல்ல வேண்டும் என்று 78 வயதாகும் முன்னாள் பிரதமரான திரு கோ ஊக்குவித்தார். "குணப்படுத்துவதைவிட தடுப்பதே சிறந்தது.

"எனவே, உணவைக் கவனத்தில் கொள்ளுங்கள். நானும் என் உணவில் கவனமாக இருப்பேன்," என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு வாரியம் கட்டுப்படியாகும் கட்டணத்தில் சுகாதார பரிசோதனைகளை வழங்குவதையும் அவர் குறிப்பிட்டார்.