வட்ட ரயில் பாதையின் இறுதிக் கட்டமான வட்டப்பாதை 6க்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. சுரங்கம் தோண்டுவதற்கான ராட்சத இயந்திரங்கள் கெப்பல் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடத் தொடங்கின.
கெப்பல் நிலையத்தில் இருந்து ஹார்பர் ஃபிரண்ட் நிலையம் வரையிலான சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டதாக நில போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. அந்தப் பணிகளுக்காக மேலும் இரண்டு இயந்திரங்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பணியில் இறங்கும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
வட்டப்பாதை 6க்கான நில அகழ்வு மற்றும் கட்டமைப்புப் பணிகளில் 66 விழுக்காடு முடிவடைந்த நிலையில் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
நில அகழ்வு, கட்டமைப்பு போன்ற பணிகள் தொடங்கி நன்முறையில் நடந்து வருவதாக ஆணையம் தெரிவித்தது. கிம் சுவான் பணிமனை நீட்டிப்பில் அடித்தளம் மற்றும் நில அகழ்வுப் பணிகள் நடந்துகொண்டுள்ளன என்றும் ஆணையம் தெரிவித்தது.
விரிவாக்கம் செய்யப்படும் பணிமனை, 133 ரயில்களைக் கொண்ட மாபெரும் வட்ட ரயில் பாதைக் கட்டமைப்புக்கு கூடுதல் வசதிகளுடன் சேவையாற்றும்.
அத்துடன் அந்தப் பணிமனை ஏறக்குறைய 550 பேருந்துகளை உள்ளடக்கக்கூடியதாக இருக்கும்.
அத்துடன் வட்ட ரயில் பாதையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மேலும் 12 புதிய ரயில்களை பிரான்சிடம் இருந்து வாங்குவதாக ஆணையம் தெரிவித்தது.
புதிதாக வாங்கப்படவிருக்கும் ரயில்கள் 2025 ஆம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்த மேம்பாட்டுப் பணிகளில் சமிக்ஞை, மின்விநியோகம் ஆகிய இயக்க முறைகள் மேம்படுத்தப்படும்.
இதன்மூலம் தனிப்பட்ட ரயில் நிலையத்திற்கும் மைய இயக்க நிலையத்திற்கும் சுணக்கமின்றி தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடியும்.
இதன் மூலம் வட்ட ரயில் பாதையின் அனைத்துச் சேவைகளையும் திறம்பட செயல்படுத்த முடியும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

