‘பேக்கரி’ தொழில் துறையை மேம்படுத்த திறன் பயிற்சி

ரொட்டி, கேக்குகள் சுடும் ‘பேக்கிங்’ துறையைச் சேர்ந்தவர்களை  நவீன வாடிக்கையாளர்களுடனான மின்னிலக்கத் தொழில்துறைக்குத் தயார்படுத்தும் விதமாக தேசிய தொழிற் சங்க காங்கிரசின் வேலைவாய்ப்பு வேலைத்திறன் பயிற்சிக் கழகமும் (e2i) சிங்கப்பூர் பேக்கரி அண்ட் ‘கன்பெக்சனரி’ வர்த்தக சங்கமும் இணைந்து பேக்கர் 4.0 எனும் முன்னோடி முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. 

இத்துறை சார்ந்தவர்களின் திறன்களை மேம்படுத்த, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவது இதன் நோக்கம். 

மேலும், புதிய கருவிகள் வாங்குவதற்கும் பயிற்சிக்கும் நிதி உதவியையும் இத்திட்டம் வழங்குகிறது. 

பேக்கிங் துறை நிபுணர்கள் தங்களது மின்னிலக்கத் தொழில்நுட்பம், தானியக்கம், சமையல் குறிப்பு மேம்பாடு, உணவுக் கழிவு குறைப்பு, உணவு அறிவு, மேம்பாட்டில் தொழில்நுட்பத் திறன் போன்றவை மூலம் மாறிவரும் வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பது  இத்துறையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்தது.

‘சிங்கப்பூர் பேக்கரி அண்ட் கன்பெக்சனரி’ வர்த்தக சங்கத்தில் கிட்டத்தட்ட 6,000 ஊழியர்களைக் கொண்ட 300 பேக்கரிகள் உள்ளன.

பேக்கர் 4.0ன் கீழ் இடம்பெற்றுள்ள திட்டங்களில் ஒன்று, குமாரி கோ நடத்தும் பயிற்சித் திட்டம். 

பேக்கரி நிர்வாகம், நிபுணத்துவ தொழிலர்களுக்கான ரொட்டி, கேக் போன்றவை தயாரிக்கும் திறன் ஆகியவற்றைச் சொல்லித் தரும் இப்பயிற்சித் திட்டத்தை அவரே உருவாக்கி, நடத்துகிறார்.

இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேரத் தகுதியுள்ளோருக்கு பயிற்சிக் கட்டணத்தில் 70% வரை மானியம் கிடைக்கும். பயிற்சிக்குப் பின்னர் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மேலும்,  வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்துவது, மனிதவளத் தேவையுள்ள சங்கத்தின் உறுப்பினராகவுள்ள நிறுவனங்களுக்கு தகுந்த நிதியுதவி அளிப்பது என வேலைத்திறன் உதவிகளை வழங்க சிங்கப்பூர் ஊழியரணி ஒத்துக்கொண்டுள்ளது.

சிலாக்ஸ் ஆசியா 2019 எனும் வர்த்தக, பயனீட்டாளர்  சந்தையில் வேலைவாய்ப்பு வேலைத்திறன் பயிற்சிக் கழகம், (e2i) ‘சிங்கப்பூர் பேக்கரி அண்ட் கன்பெக்சனரி’ வர்த்தக சங்கம் இடையே புரிந்துணர்வு உடன்பாடு நேற்று கையெழுத்தானது. இச்சந்தை நாளை வரை நடைபெறும்.

பணி மேம்பாட்டுக்கான தெளிவான பாதை இருந்தால், இத்துறைக்கு ஆர்வமுள்ளவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று சிலாக்ஸ் ஆசியா 2019 சந்தையை நேற்றுத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சரும் என்டியுசியின் பொதுச் செயலாளருமான இங் சீ மெங் தெரிவித்தார்.