போலிசார், 1.7 மில்லியன் மோசடி தொடர்பில் 32 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்-வர்த்தக மோசடி, வர்த்தக குற்றச்செயல் தொடர்பில் போலிசார் மேற்கொண்டுள்ள விசாரணையில் அவர்கள் உதவி வருவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் போலிஸ் படை தெரிவித்தது.
சந்தேக நபர்களுக்கு ஏறக்குறைய 57 மோசடி சம்பவங்களில் தொடர்பிருக்கும் என நம்பப்படுகிறது. இந்த மோசடி வலையில் வீழ்ந்த பலர் 1.7 மில்லியன் வரை இழந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வருகிறது.
சந்தேக நபர்கள் 17 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்களில் 13 பேர் பெண்கள்.
இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை கிளமெண்டி காவல் நிலையத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இணையம் வழியாக பொருட்களை வாங்குவது, கடன் பெறுவது போன்ற நடவடிக்கையில் மோசடிக்காரர்கள் ஈடுபடுவதற்கு தங்களுடைய வங்கிக்கணக்குகளை பயன்படுத்த 26 பேர் அனுமதித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கள்ளப்பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியது தொடர்பிலும் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஏமாற்றியது குறித்து ஐவர் விசாரிக்கப்படுகின்றனர்.
இந்த குற்றச்செயலுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
நம்பிக்கை மோசடி தொடர்பில் 51 வயது நபரிடம் விசாரணை நடைபெறுகிறது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்த நிலையில் கிளமெண்டி போலிஸ் நிலைய துணை கமாண்டர் மசகோஸ் இட்ரிஸ் மசகோஸ் ஹுசேன், மோசடி மற்றும் தில்லு முல்லுகளில் ஈடுபடுபவர்களை எச்சரித்துள்ளார்.
அத்தகையோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

