முதல் முறையாக சிங்கப்பூர் ஆற்றிலிருந்து வாண வேடிக்கை

முதல் முறையாக சிங்கப்பூர் ஆற்றிலிருந்து வாண வேடிக்கை

1 mins read
ac221eee-16d2-498a-bc16-8e4f2543ed47
இவ்வாண்டின் வாண வேடிக்கை சிங்கப்பூர் ஆறு உட்பட மூன்று இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேசிய நாள் கொண்டாட்ட உணர்வு அனைத்து சிங்கப்பூரர்களையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீண்டநேரம் வாண வேடிக்கை பரந்த அளவில் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதி கூறியுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய நாள் அணிவகுப்பின் முக்கிய அங்கம் வாண வேடிக்கை. ஒட்டுமொத்த கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக வாண வேடிக்கை மெய்சிலிர்க்க வைப்பது வழக்கம்.

இதை, இவ்வாண்டு அதிகமானவர்கள் கண்டு ரசிப்பதற்காக மூன்று இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று இடங்களில் சிங்கப்பூர் ஆறும் ஒன்று.

ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் முன்பு உள்ள மேடை, மரினா பே, பாடாங் ஆகிய மூன்று இடங்களில் வாண வேடிக்கை காட்சி நடைபெறும்.

இவ்வாண்டின் தேசிய நாள் அணிவகுப்பின் வாண வேடிக்கை குழுவின் தலைவரான ராணுவ நிபுணர் ஜான்சன் லிங், சிங்கப்பூர் இருநூறு ஆண்டை நிறைவு செய்துள்ளதால் இவ்வாண்டு சிறப்பு மிக்கது என்று குறிப்பிட்டார்.

"இதில் சிங்கப்பூர் ஆறு மிக முக்கியமானது. இங்குதான் முன்னோர்கள் ஒன்றுகூடி இன்றைய சிங்கப்பூர் உருவாக காரணமாக இருந்தனர்," என்றார் அவர்.

சிங்கப்பூரின் 54வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வாண வேடிக்கை பரந்து காட்சியளிக்கும் என்று உறுதி கூறியுள்ள தேசிய நாள் அணிவகுப்பு ஏற்பாட்டாளர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட நேரம் நீடிக்கும் என்று கூறியுள்ளனர்.