ஜூரோங்ஹெல்த் வளாகத்தின் கண் சிகிச்சை பிரிவின் தலைவரான லென்னார்ட் ஹரோல்ட் தியன் சீ யின், 55, இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் மருத்துவ நிலையம் ஆகியவற்றில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றும் அவர் மீது அலைக்கழித்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 18ஆம் தேதி 8.37 மணியளவில் ஹாலண்ட் ரோடு அருகே குயின் ஆஸ்டிரிட் பார்க் வழியாக காரில் சென்றுகொண்டிருந்த அவர் மற்றொரு வாகனமோட்டியான மார்ட்டின் லு ஜுன்வெய்யை எச்சரிக்கும் வகையில் தொடர்ந்து ஒலி எழுப்பி தொந்தரவு செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கண்ணாடி போத்தலை லுயின் கார் மீது அவர் வீசினார்.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான மருத்துவருக்கு 5,000 வெள்ளி பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டது.
2002ஆம் ஆண்டிலிருந்து தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கண் சிகிச்சை மருந்தகத்தின் இயக்குநராக அவர் பணியாற்றி வந்ததாக ஜூரோங்ஹெல்த் வளாகத்தின் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஜூரோங்ஹெல்த்தில் சேர்ந்தார். அமைச்சின் சுகாதார தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக அவர் இடம் பெற்றுள்ளார்.

