சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த நான்கு ஆடவர்கள் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்களைக் கடலோரக் காவற்படையினர் பின்னிரவு ஒரு மணிக்குக் கைது செய்தனர்.
ஈஸ்டர்ன் ஹோல்டிங் ஏங்கரேஜுக்கு அருகிலுள்ள சிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதிகளில் மரப்படகு ஒன்றுக்குள் நான்கு ஆடவர்கள் ஒளிந்திருந்ததைக் கடலோரக் காவல் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக போலிஸ் தனது அறிக்கையில் தெரிவித்தது.
"மரக்கலன் உடனே இடைமறிக்கப்பட்டது. சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததன் பேரில் நான்கு ஆடவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்," என்றது அந்த அறிக்கை.
படகைச் சோதனை செய்த போலிசார், தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கண்டனர்.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது மூன்று பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

