தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வின் மதிப்பீட்டு முறையில் மாற்றங்கள்; தெரிந்துகொள்ள வேண்டியவை

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வின் மதிப்பீட்டு முறையில் மாற்றங்கள்; தெரிந்துகொள்ள வேண்டியவை

2 mins read
06d41df4-b6e4-4594-9219-ce128aa22794
-

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வின் மதிப்பீட்டு முறையில் செய்யப்படும் மாற்றங்களைப் பற்றிய சில விவரங்களைக் கல்வியமைச்சு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தொடக்கநிலை நான்கு பயிலும் மாணவர்களைப் பாதிக்கும்.

இது குறித்த சில கேள்விகளுக்கான விடைகள் இங்கே:

1. வியாழக்கிழமை என்னென்ன மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன?

அடுத்தாண்டு முதல் தொடக்கப்பள்ளி 5ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்கள் தற்போதுள்ள ஏ முதல் ஈ வரையிலான தரநிலைகளுக்குப் பதிலாக 'அடைவு நிலை' (Achievement level) 1 முதல் 8 என்ற முறையின்கீழ் தரப்படுத்தப்படுவர். இதில் 'அடைவு நிலை' 1 (அதாவது 'ஏஎல்' 1), ஆக உயரிய தேர்ச்சி. அடுத்து, 2021ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் இறுதித் தேர்வின் முடிவுகளை டி-ஸ்கோர் அடிப்படையில் இல்லாமல் 'அடைவு நிலை' அடிப்படையில் வெளியிடப்போவதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது.

மூன்றாவதாக, அடிப்படைப் பாடங்களை எடுப்போருக்கு ஏஎல் 'ஏ' முதல் ஏஎல் 'சி' வரையிலான தரநிலைகள் வழங்கப்படும். இவை, ஏஎல் '6' முதல் ஏஎல் '8' தரநிலைகளுக்கு ஒப்பானவை.

2. உயர்மட்ட தரநிலைகளில் நான்கு பிரிவுகள் (ஏஎல் 1 முதல் ஏஎல் 4 வரை) இருப்பது ஏன்? மதிப்பெண் பகுத்தலைக் குறைக்க முற்படும் கல்வி அமைச்சின் இலக்கிற்கு இது முரணாக இல்லையா?

'ஏஎல்' தரநிலைகள் மிகவும் குறைவாக இருந்தால் அதே இறுதித் தேர்வு மதிப்புகளைக் கொண்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் இதனால் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கும்போது குலுக்கல் முறை அதிகம் பயன்படுத்தப்படலாம் என்றும் கல்வியமைச்சு கூறியது. அதிக தரநிலைப் பிரிவுகள் இருக்கும்போது பாடத்தை மாணவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துள்ளனர் என்பதையும் தெரிந்துகொள்ளலாம் என்று கல்வியமைச்சு கூறியது.

3. அடிப்படை பாடங்களை எடுக்கும் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியின் விரைவு நிலையில் சேர முடியுமா?

நான்கு பொதுப் பாடங்களில் குறைந்தது ஒன்றை எடுத்துக்கொள்ளும் மாணவர்கள், உரிய மதிப்பெண்களைப் பெற்றால் அவர்கள் விரைவு நிலைக்குச் செல்லலாம். மேலும், உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது அவர்கள் வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு நிலைகளில் தங்களால் சமாளிக்க இயலும் அளவுக்கு எடுத்துப் படிக்கலாம்.

மாணவர்கள் தங்களது சொந்தத் திறமைகளை ஆராய்ந்து, பொது அல்லது அடிப்படை நிலையில் பாடங்கள் எடுப்பதா என்பதை முடிவு செய்யவேண்டும் என்றது கல்வியமைச்சு.

(விரிவான செய்தி, இன்றைய அச்சுப்பிரதியில்...)