தொடர்ந்து உயரும் வேலையின்மை விகிதம்

சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  அனைத்துலக வர்த்தகம், உலகளாவிய நிச்சயமின்மை ஆகியவற்றால் வேலைவாய்ப்பு விகிதம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் குறைந்தது இதற்குக் காரணம். ஆயினும், ஆட்குறைப்பு விகிதம் குறைந்திருப்பதாக  மனிதவள அமைச்சு இன்று வெளியிட்ட ஆரம்பக்கட்ட தரவு குறிப்பிடுகிறது.

சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதம்  மூன்றாவது காலாண்டில் உயர்ந்து ஜூன் மாதத்தில் 3.3 விழுக்காடாகப் பதிவானது.  மார்ச் மாதத்தில் இந்த விகிதம் 3.2 ஆக இருந்தது.  சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கான மொத்த விகிதம் 3லிருந்து 3.1 ஆக உயர்ந்துள்ளது.  ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் எந்த மாறுதலுமின்றி 2.2 விழுக்காடாக இருந்தது.

ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களில் ஆட்குறைப்புகளின் எண்ணிக்கை 2,300 ஆகக் குறைந்துள்ளன. இந்த எண்ணிக்கை  கடந்த காலாண்டில் 3,230 ஆகவும் கடந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் 3,030 ஆகவும் உள்ளன. தகவல் தொழில்நுட்பம்,  நிபுணத்துவ சேவைகள், நிதியியல் சேவைகள்,  சமூக, சமுதாய, தனிப்பட்ட சேவைகள் ஆகிய துறைகளில் வேலை  விகிதம் அதிகரித்தது. ஆனால் இந்த அதிகரிப்பைக் காட்டிலும்  சில்லறை விற்பனைத் துறையில் வேலை வாய்ப்பு விகிதம் குறைந்தது.