வீவக வீடுகளின் விற்பனை கூடியது, விலை குறைந்தது

வீவக வீடுகளின் விற்பனை கூடியது, விலை குறைந்தது

2 mins read

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது காலாண்டில் வீவக வீடுகளின் விற்பனை முப்பது விழுக்காடு கூடியது என்று வீவக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இவ்வாண்டின் 2வது காலாண்டில் 6,276 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. இது, இதற்கு முந்தைய காலாண்டில் விற்கப்பட்ட 4,835 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 29.8 விழுக்காடு அதிகம்.

அது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டின் 2வது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் 2வது காலாண்டில் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை 5.6 விழுக்காடு கூடியது.

ஆரஞ்ச் டீ & டை நிறுவனத்தின் ஆய்வு, ஆலோசனைப் பிரிவின் தலைவரான கிறிஸ்டின் சன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சொத்துச் சந்தையைத் தணிக்கும் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இப்போதுதான் முதல் முறையாக வீவக வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். இதனால் வீவக சந்தை புதிய உத்வேகம் பெற்றுள்ளது என்றும் அவர் சொன்னார்.

அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களும் வீடுகளின் விற்பனை அதிகரிப்பதற்கு காரணமாகும்.

மத்திய சேம நிதியை நீக்குப் போக்காகப் பயன்படுத்த அனுமதிக் கப்பட்டது மாற்றங்களில் ஒன்று.

வீடு வாங்குவோரில் ஆக இளையவர் 95வது வயது வரை சொத்தின் குத்தகை காலம் இருந்தால் அதிகபட்சமாக வீட்டுக் கடனை வாங்க முடியும் என்பது மற்றொரு மாற்றம்.

பழைய வீடுகளின் குத்தகைக் காலம் குறைந்து வருவதால் வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டை விற்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் கூறிய கிறிஸ்டின் சன், கொள்கை மாற்றம் காரணமாக பழைய வீடுகளுக்கான தேவை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்றார்.

ஒரு பக்கம் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை அதிகரித்தாலும் மறுபக்கம் வீட்டின் விலை குறைந்துள்ளது. முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2வது காலாண்டில் விலை 0.2 விழுக்காடு குறைந்தது. கடந்த நான்கு காலாண்டுகளாகவே வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை குறைந்து வந்துள்ளது.