தெம்பனிசில் புதிய பாத்லைட் வளாகம்; 500 மாணவர்கள் சேர முடியும்

தெம்பனிசில் புதிய பாத்லைட் வளாகம்; 500 மாணவர்கள் சேர முடியும்

2 mins read

தொடக்கநிலை மாணவர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தெம்பனிசில் பாத்லைட் பள்ளியின் புதிய வளாகம் அமையவிருக்கிறது.

2023ஆம் ஆண்டில் திறக்கப்படும் இந்தப் பள்ளியில் அறிவு வளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் சேர்த்து 500 பேருக்கு இடமிருக்கும்.

அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள பிரதானப் பள்ளி, அங் மோ கியோ ஸ்திரீட் 44ல் உள்ள தற்காலிக வளாகம் ஆகியவற்றுடன் சேர்த்து தற்போதைய அறிவிப்பு தொடக்கநிலை மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தெம்பனிஸ் புதிய வளாகம் பற்றிய அறிவிப்பை நேற்று கல்வி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா வெளியிட்டார். ஏற்கெனவே உள்ள இரண்டு பள்ளி வளாகங்களில் மொத்தம் 1,400 மாணவர்கள் படிக்க முடியும். இவர்களில் அறிவு வளர்ச்சி குன்றிய, சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் உட்பட தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாண வர்களும் அடங்குவர்.

முன்பு ஈஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி செயல்பட்ட அதே தெம்பனிஸ் ஸ்திரீட் 91ல் புதிய பள்ளி வளாகம் கட்டப்படுகிறது. பாத்லைட் பள்ளிக்கு வந்த தேவையைக் கருத்தில் கொண்டு புதிய வளாகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜுன்யுவான் தொடக்கப்பள்ளி, செயின்ட் ஹில்டாஸ் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு அருகே இந்த பள்ளி இடம்பெறும். இதனால் பாத்லைட் மாணவர்களும் மற்ற பள்ளிகளின் மாணவர்களும் ஒன்றுகூடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

இதை சுட்டிக்காட்டிய குமாரி இந்திராணி, "சிறப்புத் தேவையுடையவர்களைப் புரிந்துகொள்ள நமது இளையர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்," என்றார்.

புதிய தெம்பனிஸ் பள்ளி வளாகத்தில் விளையாட்டு உள்ளரங்கம், கணினி அறைகள் உட்பட பல வசதிகள் செய்யப்பட உள்ளன.