வெளிநாட்டு ஊழியர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு அபராதம்

வெளிநாட்டு ஊழியர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு அபராதம்

1 mins read

வெளிநாட்டு ஊழியர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த வேலை வாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் கன்சல்டிங் சர்வீசஸின் உரிமம் பெற்ற குலாப் சிங்குக்கு நேற்று நீதிமன்றம் 17,300 வெள்ளி அபராதம் விதித்தது.

அதோடு பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அவருக்கு உத்தர விடப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களிடம் அவர் கூடுதல் கட்டணம் வசூலித்ததோடு வேலைக்கு உத்தரவாதம் அளிக்க தனியாக ஒரு தொகையை அவர் பெற்றுக் கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முறையான ரசீதுகளையும் அவர் வழங்கவில்லை. 2017 செப்டம்பரிலிருந்து 2018 ஜூன் வரையில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அவர் கூடுதலாக 1,664 வெள்ளியை பெற்றதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

திரு சிங், எழுத்துபூர்வமான ரசீது கொடுக்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

ஆனால் மற்றோர் ஊழியரிடமிருந்து உத்தரவாதத் தொகையாக 5,284 வெள்ளி பெற்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே அவரது வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மனிதவள அமைச்சு ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.