டிரம்ப்: சிங்கப்பூர் போன்ற பணக்கார நாடுகள் 'வளரும் நாடு' என்ற அங்கீகாரத்தை பெறக்கூடாது

டிரம்ப்: சிங்கப்பூர் போன்ற பணக்கார நாடுகள் 'வளரும் நாடு' என்ற அங்கீகாரத்தை பெறக்கூடாது

2 mins read

சிங்கப்பூரும் இதர பணக்கார நாடுகளும் 'வளரும் நாடுகள்' என்று தாங்களாகவே அறிவித்துக்கொண்ட நிலைப்பாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலக வர்த்தக அமைப்பின் சலுகைகளை அனுபவித்து வருகின்றன என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார். உலக வர்த்தக அமைப்பு, 'வளரும் நாடுகள்' அங்கீகாரம் குறித்த தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் நேற்று முன்தினம் வலியுறுத்தினார்.

"உலகின் பணக்கார நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு தாங்கள் வளரும் நாடுகள் என்று கூறிக்கொண்டு, சிறப்புச் சலுகைகள் பெற்றுக்கொள்ளும்போது, உலக வர்த்தக அமைப்பின் செயலாக்கம் உடைந்து விட்டது என்று கூறுவதில் தவறில்லை. இனி அப்படி இருக்க முடியாது," என்று திரு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார்.

இத்தகைய நாடுகளுக்கு 'வளரும் நாடுகள்' என்ற அங்கீகாரத்தைக் கொடுப்பதை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப், தனது வர்த்தகப் பிரதிநிதி திரு ராபர்ட் லைட்டைசருக்குக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தக் குறிப்பு சீனாவைக் குறி வைத்து எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.

நியாயமற்ற வர்த்தகச் சலுகை களால் பயன்பெறும் சீனா, இதர உலக வர்த்தக அமைப்பு நாடு களுடன் ஒப்புநோக்க வலுவற்ற வர்த்தகக் கடப்பாடுகளைக் கொண்டுள்ளது என்று கூறும் திரு டிரம்ப், பணக்கார நாடுகளாக இருக்கும் பத்து நாடுகள் வளரும் நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்று, தற்போதைய பொருளியல் சூழலில் சலுகைகளைப் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சாடினார்.

இந்த நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் பணக்கார நாடுகள் அல்லது ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் அல்லது ஓஇசிடி எனப்படும் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பின் நாடுகள் என்று கூறப்படுகிறது.

அந்தப் பட்டியலில் சிங்கப்பூர், புருணை, ஹாங்காங், குவைத், மக்காவ், மெக்சிகோ, கத்தார், தென்கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு சிற்றரசுகள் போன்ற நாடுகள் உள்ளன.

"பணக்கார நாடுகள் வளரும் நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெறுவதால், அவர்கள் மற்ற வளர்ந்த நாடுகளை மட்டும் பாதிக்காமல் சிறப்புச் சலுகை மற்றும் உண்மையாகவே உதவி தேவைப்படும் நாடுகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் பாழாக்குகின்றனர்.

"உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத தன்மையையும் எதிர்கால விதிகளைப் பின்பற்றாத தன்மையும் இனிமேல் ஏற்றுக்கொள்ள முடியாது," என்று அதிபர் டிரம்பின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்பின் உத்தரவை நடைமுறைப்படுத்த தாம் தயாராக இருப்பதாகக் கூறிய திரு லைட்டைசர், "உலக வரத்தக அமைப்பின் விதிமுறைகளைத் தவறாது பின்பற்றும் அமெரிக்கர்களுக்கு இது நியாயமற்றதாக இருக்கும்," என்றார்.

இதற்கிடையே அதிபர் டிரம்ப் கூறிய கருத்துகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் வர்த்தக தொழில் அமைச்சு, "உலக வர்த்தக அமைப்பின் பேரப்பேச்சு உடன்பாடுகளில் சிறப்பு மற்றும் மாறுபட்ட சலுகைகள் நீக்குப்போக்குத்தன்மையை சிங்கப்பூர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதில்லை.

"உலக வரத்தக அமைப்பின் விதிமுறைகளை மேம்படுத்தும் முக்கியத்துவத்துக்கு சிங்கப்பூர் முழுமையாக ஆதரவளிக்கிறது. அந்த அமைப்பை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் சிங்கப்பூரும் முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது," என்றும் அமைச்சின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.