நாள்தோறும் 69 வயது திருவாட்டி பெர்லி ஆவ், 'MyTransport.sg' கைபேசிச் செயலியைப் பயன்படுத்தி பேருந்து வரும் நேரங்களைச் சரிபார்த்துக்கொள்வார்.
மேலும் தேசிய நூலக வாரியத்தின் கைபேசிச் செயலி மூலம் அவர் மின்நூல்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கிறார்.
நிதி அலுவலராகப் பணிபுரியும் திருவாட்டி ஆவ், மின்னிலக்கத்தின் உதவியுடன் தாம் இணைந்திருப்பது, தமது அன்றாட வாழ்க்கையில் பல அலுவல்களைத் திறம்பட செய்ய வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற முதலாவது மின்னிலக்க விழாவில் மற்ற முதிய சிங்கப்பூரர்களுக்கு மின்னிலக்க வழிகாட்டியாக அவர் செயல்பட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அறிவார்ந்த தேசத் தூதுவர் திட்டத்தில் இதுவரை 600 பேர் பதிவுசெய்து கொண்டுள்ளனர் என்று அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகம் நேற்று தெரிவித்தது.
வாழ்நாள் கற்றல் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சரும் அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான விவியன் பாலகிருஷ்ணன், மின்னிலக்கமயத்திற்கு சமூகத்தைத் தயார்ப்படுத்தும் திட்டத்தில் அறிவார்ந்த தேசத் தூதுவர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார்.
மெர்டேக்கா தலைமுறையினருக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவார்ந்த தேச காலை விருந்தில் பங்கேற்ற 3,000க்கும் மேற்பட்டோரின் முன்னிலையில் பேசிய டாக்டர் விவியன், தொழில்நுட்ப அம்சங்களில் இன்னும் பரிட்சயமாகாத முதியவர்கள் அவற்றைக் கற்றுக்கொண்டு மின்னிலக்கத்துடன் இணைந்திருக்குமாறு அறிவுறுத்தினார்.

