தொடக்கப்பள்ளியில் சேர்வதற்கு முன்பே தமிழ் பிள்ளைகளிடையே தமிழ் அமுதை ஊட்டியது சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் பாலர் பள்ளி வகுப்புகளுக்கான தமிழ்மொழி வளமூட்டும் நிகழ்ச்சி.
விளையாட்டு, ஆடல், பாடல் என்று இன்பமயமான நடவடிக்கைகளின் மூலம் தமிழ்மொழியைப் பள்ளி மாணவர்களிடம் கற்றுக்கொடுப்பதற்காக நடத்தப்படுகின்ற இந்நிகழ்ச்சி இம்மாதம் தொடங்கப்பட்டது. ஐந்து முதல் ஆறு வயது வரையிலான பாலர் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற இந்த 20 வார நிகழ்ச்சியில் சுமார் 250 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில் வீட்டில் தமிழ் பேசாத மாணவர்களுக்கு ஓர் இன்பமான சூழலில் தமிழ் மொழியை அறிமுகப்படுத்தி அதன் அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பதும் தொடக்கப்பள்ளியில் தமிழ்மொழி யைத் தன்னம்பிக்கையுடன் பேசுவதற்குத் தயார்ப்படுத்துவதுமே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் மாணவர்களில் 40 விழுக்காட்டினருக்கு அவர்களது பாலர் பள்ளிகள் அல்லது வீட்டில் தமிழ் புழக்கம் இல்லாதது கவலைமிக்க ஒன்றானது என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு இரா. அன்பரசு குறிப்பிட்டார். இந்நிலைமையைச் சமாளிக்க தமிழ் பேசாத மாணவர்களையும் தமிழ் பேசும் மாணவர்களையும் ஒரே வகுப்பில் வைத்து மாணவர்களிடையே தமிழ்மொழிப் பரிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
சிண்டா, சமூக மன்றங்கள் உட்பட மொத்தம் 11 இடங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இன்னும் அதிகமான இடங்களில் இடம்பெறுவதற்கான திட்டங்கள் உள்ளன. இந்நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் $450 செலவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்பதற்காக சிண்டா அதிகளவில் கட்டணக் கழிவுகளை வழங்கியுள்ளது. $1,000க்குள் உள்ள தனிநபர் வருமான குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்படுகிறது. $1,000க்கு மேல் உள்ள தனிநபர் வருமான குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் $10 கட்டணத்தைச் செலுத்துவர்.
இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கெடுத்த ஆறு வயது ஹன்சிகா, வகுப்பில் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொண்டதுடன் சுவாரசியாமான விளையாட்டுகளிலும் தான் ஈடுபட்டதாகக் கூறினார். "பம்பரம், ரப்பர் போன்ற புதிய சொற்களை நான் கற்றேன். பந்தை வைத்து நாம் விளையாடினோம். ஆடல், பாடலின் வழி நிறைய தமிழ்ச் சொற்களைக் கற்றது இன்பமாக இருந்தது," என்று கூறிய ஹன்சிகா, தன்னை மகிழ்வித்த இதுபோன்ற தமிழ்மொழி நிகழ்ச்சிக்கு மறுபடியும் வர விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
அதே வயதுடைய மற்றொரு மாணவரான தேவேஷின் தாயார் திருமதி வித்யா கிருஷ்ணன், தமிழ் மொழியின் மீது தமது மகனுக்கு ஏற்பட்ட ஆர்வத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார். "இந்நிகழ்ச்சியின் மூன்றாம் வாரம் இது. ஆனால் இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே எனது மகன் தமிழில் பேச தொடங்கிவிட்டான். தமிழில் ஒரு சில வார்த்தைகள்கூட என்னிடம் பேசாத அவன் இப்போது 'ஆமாம், இல்லை' போன்ற சுலபமான வார்த்தைகளைத் தமிழில் பேசியதைக் கேட்டு நான் பூரிப்படைந்தேன்," என்று கூறிய 37 வயது திருமதி வித்யா, இந்நிகழ்ச்சி தொடக்கநிலை ஒன்றின் தமிழ்மொழிப் பாடத்தை சுலபமாக்கக்கூடியது என குறிப்பிட்டார்.

