மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீச்சம்பவம்

மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீச்சம்பவம்

2 mins read

ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் ஒன்றில் நேற்று அதிகாலை தீ மூண்டதையடுத்து அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த 60 ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

எண் 3 மவுண்ட் எலிசபெத் ரோட்டில் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து அதிகாலை 6.30 மணிவாக்கில் சம்பவ இடத்திற்குத் தான் விரைந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மருத்துவமனையின் புளோக் 'சி' வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் தீ கட்டுக்குள் இருந்ததாக அது விவரித்தது.

நீரைப் பீய்த்து அடித்து தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் மருத்துவ மனையில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி நொவெல் இயோ, ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதே மருத்துவமனையின் முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறினார். அதே வேளையில், நோயாளிகளுக்கும் அவர்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வரும் வருகையாளர்களுக்கும் தீச்சம்பவத்தால் ஏற்பட்டுள்ள அசௌகரியத்தைக் குறைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

"தீச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் இதிலிருந்து கற்றுக்கொள்ளவும் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து மருத்துவமனை அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் எடுப்போம்.

"தீச்சம்பவத்தால் அசௌகரியத்திற்கு ஆளான நோயாளிகள், மருத்துவமனைக்கு வருபவர்கள் மற்றும் மருத்துவமனையைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்," என்றார் டாக்டர் இயோ.