இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இசைக் கச்சேரிகள், இதர நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனையின் தொடர்பில் நிகழ்ந்த இணைய மோசடி சம்பவங்களில் குறைந்தது 133 பேர் பாதிக்கப்பட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் இசைக் கச்சேரிகள், 'எஃப் 1' விரைவுகார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களிடையே இத்தகைய மோசடிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை போலிசின் கவனத்திற்கு வந்த புகார்களில், கட்டணம் செலுத்திய பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைக்கவில்லை, அல்லது செல்லாத நுழைவுச்சீட்டுகள் அவர்களுக்குக் கிடைத்தன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூரின் 54வது தேசிய தின அணிவகுப்பு, செப்டம்பர் 20 முதல் 22ஆம் தேதி அரை 'எஃப் 1' விரைவுகார் பந்தயம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு போலிஸ் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளது.
நிகழ்ச்சிகளுக்கு நுழைவுச்சீட்டுகளை வாங்கும்போது மோசடிக்காரர்களிடம் ஏமாறாமல் இருக்க குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு, அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நுழைவுச்சீட்டுகளை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அல்லது, தனிப்பட்ட விற்பனையாளரிடமிருந்து நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே பணத்தைச் செலுத்தலாம்.

