'சின்யாவ்' பாடகர், பாடலாசிரியரான ஜிம்மி யேவின் பல்லாண்டு தீவிர ரசிகையான கிரசென்ட் பெண்கள் பள்ளி மாணவி அம்ரிதா தேவராஜ், தமது சீன மொழி ஆசிரியரின் ஊக்குவிப்பால் சென்ற ஆண்டு தேசிய அளவில் நடத்தப்பட்ட சீனப் பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.
அதையடுத்து தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையே இவ்வாண்டு நடந்த சின்யாவ் பாடல் மற்றும் பாடல் வரிகள் எழுதும் போட்டியில் பங்கேற்று தற்போது அதன் ஒற்றையர் பிரிவில் சிறந்த பாடகராக வலம் வந்துள்ளார் 16 வயது அம்ரிதா.
"சின்யாவ் பாடல் வரிகள் நமது வாழ்க்கைக்கு தொடர்புள்ளவையாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது," என்றார் இவர்.
கடந்த மாதம் தொடங்கிய இப்போட்டியின் மூன்று சுற்றுகளையடுத்து 15 பள்ளிகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் சென்ற சனிக்கிழமை நடந்த மாபெரும் இறுதிச் சுற்றில் பொருதினர்.
தொழில்நுட்பக் கல்விக் கழக அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டி, சீன மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்கான குழு, ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி, சாவ் பாவ் நாளிதழ், சின்யாவ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் 'டிசிஆர் இசை நிலையம்' ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடந்தேறியது.

