கல்வி அமைச்சர் ஓங்: இது கல்வி முறையின் முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்று

கல்வி அமைச்சர் ஓங்: இது கல்வி முறையின் முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்று

2 mins read
65dba73d-4934-4cb1-9f48-56ac219c940b
ஒட்டுமொத்த கல்வி முறையில் கொண்டுவரப்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஸக்கி அப்துல்லா -

தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வின் (பிஎஸ்எல்இ) மதிப்பீட்டு முறையில் செய்யப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கமான ஒட்டுமொத்த கல்வி முறையில் கொண்டுவரப்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளிலும் ராணுவத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தனிநபர் உடலுறுதிச் சோதனை மதிப்பீட்டு முறையைப்போல இந்தப் புதிய அடைவுநிலை (Achievement Level) முறை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

செம்பவாங் வட்டாரத்தில் உள்ள காம்பாஸ் தொகுதியில் நேற்று நடைபெற்ற சமூக நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு ஓங், இந்தப் புதிய மதிப்பீட்டு முறை குறித்த விவரங்கள் கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட பிறகு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த கருத்துகளைத் தாம் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

"முந்தைய கல்வி முறையுடன் ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளனவா என்று பலர் என்னிடம் கேட்டார்கள். இதன் அடிப்படையான கோட்பாடுகள் வெவ்வேறானவை.

"பழைய 'டி ஸ்கோர்' முறை, தேசிய ஓட்டப்பந்தயப் போட்டியில் ஒருவர் மற்றொருவருடன் போட்டிப்போட்டுக்கொண்டு ஓடுவது போன்றது. யாராவது உங்களை முந்திக்கொண்டால் நீங்கள் பதக்கத்தை இழந்துவிடுவீர்கள். அறிமுகம் கண்டுள்ள இந்தப் புதிய முறையில் 'டி ஸ்கோர்' மதிப்பெண் முறைக்குப் பதிலாக விரிவான மதிப்பெண் அளிக்கும் முறை செயல்படும். இதில், ஒருவரது தனிப்பட்ட செயல்திறன்தான் மதிப்பிடப்படும்," என்று திரு ஓங் விளக்கினார்.

புதிய அடைவுநிலையில் மதிப்பீட்டு முறையில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வலியுறுத்திய அமைச்சர், புதிய முறையில் பாடங்களில், பாடத்திட்டத்தில், கற்றுக்கொடுக்கும் முறையில் மாற்றம் எதுவுமில்லை என்றார்.

கல்வி முறையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முடிவு இருப்பதுபோல பலருக்குத் தோன்றுவதால், புதிய மாற்றங்களில் என்ன பெரிய அம்சம் இருக்கிறது என அவர்கள் வினவியதைத் திரு ஓங் சுட்டினார்.

"நாம் மனவுளைச்சலைக் குறைக்க வேண்டும், மனனம் செய்வதைக் குறைக்க வேண்டும், மதிப்பெண்கள் மீதான முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

"அப்படி இருக்கையில், அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதுபோல தெரியும் வேளையில், இது எப்படி மேற்கூறிய விஷயங்களைத் தீர்க்கும் என அவர்கள் கேட்கின்றனர்," என்றார் அமைச்சர்.

"அவர்களது கருத்துகளை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தொழில்துறைகளும் நவீன பொருளியலும் எவ்வாறு மாறி வருகின்றன என்பதைப் பல பெற்றோர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

"அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை நினைத்து பரிதாபப்படுகின்றனர். பிஎஸ்எல்இ தேர்வை வாழ்வா, சாவா எனக் கருதி மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதைப் பெற்றோர்களும் ஊக்கப்படுத்தி வலியுறுத்துகின்றனர். ஆனால், இது பிள்ளைகளும் வளரும்போது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது," என்றும் அமைச்சர் ஓங் எடுத்துரைத்தர்.

"கல்வி முறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் காலம் இது. ஒரு குறிப்பிட்ட அம்சம் மட்டுமல்லாமல், பல்வேறு விதமான நடைமுறைகள் வரும் காலங்களில் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் எதிர்காலச் சவால்களுக்கு நமது பிள்ளைகளை நாம் தயார்ப்படுத்தலாம் என்றும் அமைச்சர் ஓங் கூறினார்.