ஹுவாவெய்யின் 54 வெள்ளி கைபேசிக்காகக் கடந்த வெள்ளிக்கிழமை பலர் கூடியபோது கைகலப்பில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 'வை6 புரோ' (Y6 Pro) 2019 வகை கைபேசிக்காக மக்கள், கடைகளின் திறப்புக்குப் பல மணி நேரம் முன்னதாகவே வரிசைகளில் காத்திருந்தனர். ஆயினும் அந்தக் கைபேசிகள் மிக விரைவில் விற்றுத்தீர்ந்ததால் காத்திருந்த கூட்டத்தினரில் பலர் கோபத்தில் கொந்தளித்தனர். இருந்தபோதும் ஒரு பெண்ணுக்கு அது அளவு கடந்துபோனது.
'ஜெம்' கடைத்தொகுதியின் ஹுவாவெய் கடையில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணை போலிசார் அடக்க முயல்வதைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது.
52 ஜூரோங் கேட்வே ரோட்டில் நடந்த அந்தச் சம்பவம் பற்றிய தகவல் போலிசாருக்குக் காலை 10.25 மணிக்குக் கிடைத்தது.
தகராறு செய்துகொண்டிருந்த அந்தப் பெண்ணை வெளியே போகும்படி கடை நிர்வாகி பலமுறை கேட்டிருந்தபோதும் அந்தப் பெண் மறுத்ததாக ஸ்டாம்ப் செய்தித்தளம் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், அந்தப் பெண்ணை வெளியேறுமாறு கோரியபோதும் அவர் அதற்குச் செவிசாய்க்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடித்த அமளிக்குப் பின் போலிசார் அந்தப் பெண்ணைப் பலவந்தமாக வெளியேற்றினர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

