சிங்கப்பூரில் ஸ்டார்ஹப் வழங்கும் 22 இந்திய ஒளிவழிகளில் இப்போது கலைஞர் டிவி புதிதாகச் சேர்கிறது. 'இந்தியன் எண்டர்டெயின்மண்ட் பாஸ்' வாடிக்கையாளர்கள் இப்போது அந்த ஒளிவழியை நாளை மறுநாளிலிருந்து (ஜூலை 31ஆம் தேதி) கூடுதல் கட்டணம் எதுவுமின்றி பார்க்கலாம்.
2007ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட கலைஞர் டிவி, தமிழகத்தில் தற்போது தலைசிறந்த கேளிக்கை ஒளிவழியாக உள்ளது. திரைப்படங்கள், நாடகங்கள், கதம்ப நிகழ்ச்சிகள் என பலவற்றை அது ஒளிபரப்புகிறது.
"தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான தேடலில் எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒத்திசைவை நிலைநாட்ட நாங்கள் என்றென்றும் முற்படுகிறோம். கலைஞர் டிவி உலகில் அதிக அளவு பார்க்கப்பட்டு வருகிறது. எங்களது நிகழ்ச்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்வர் என்று நம்புகிறேன்," என்று ஸ்டார்ஹப்பின் இல்லத் தயாரிப்புப் பிரிவுக்கான துணைத்தலைவர் திரு யேன் கொரெக்ஸ் கூறினார்.
"இது எங்களுக்கு உற்சாகமிக்க தருணம். இந்த அறிமுகம், கலைஞர் டிவியின் அனைத்துலகக் கால்பதிப்பை மேம்படுத்தும். இந்தப் பங்காளித்துவத்தை இன்னும் பல்லாண்டுகள் தொடர நாங்கள் ஆர்வமாக உள்ளோம்," என்று கலைஞர் டிவி குழுவின் தலைமை நிதி அதிகாரி திரு எஸ். கார்த்திகேயன் தெரிவித்தார்.

