மீடியாகார்ப் ஒளிபரப்பு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் ஒரே நடிகர் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் நபர்களாக நடித்தது தொடர்பில் அந்நிறுவனம் தனது பிரபலங்கள் நிர்வாகப் பிரிவின் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளது.
இணையக் கட்டணங்களுக்கான 'இபே.எஸ்ஜி' தளத்தை விளம்பரப்படுத்தும் அந்த விளம்பரத்தில் மீடியாகார்ப்பைச் சேர்ந்த நடிகரும் வானொலி படைப்பாளருமான டென்னிஸ் சியூ, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த நான்கு நபராக நடித்துள்ளார். சீன ஆண், சீனப்பெண், முக்காடு அணிந்திருந்த மலாய்ப் பெண், மாநிறம் பூசப்பட்ட இந்திய ஆடவர் ஆகிய தோற்றங்களுடன் இவர் விளம்பரத்தில் இடம்பெற்றார்.
இந்த விளம்பரத்தின் தொடர்பில்,' மைனா மேகஸின்' என்ற சஞ்சிகையின் தலைமை நிர்வாக ஆசிரியர் திருவாட்டி ரூபி தியாகராஜன் தமது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டார். 2019ஆம் ஆண்டிலும் ஒருவர் தனது தோலில் பழுப்பு நிறம் பூசி இந்தியராக நடிக்கிறார் என்றும் இந்த வழக்கம் மலையேறிவிட்டது என்று தாம் நினைத்திருந்ததாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்தார்.
இதுபற்றிய விளம்பரத்திற்கான பணியில் அமர்த்தப்பட்ட ஹவாஸ் வர்ல்ட்வைட் நிறுவனமும் மீடியாகார்ப் பிரபலங்கள் 'த செலேபிரட்டி ஏஜன்ஸி' முகவையும் கூட்டறிக்கை ஒன்றில் கூறுகையில்," மின்-கட்டணம் அனைவருக்குமானது எனக் கூறுவதே இந்த விளம்பரத்தின் நோக்கமாகும். இதற்காகவே, பல்வேறு கதாரபாத்திரங்களை ஓரே நிகழ்ச்சியின்போது நடித்துக்காட்டும் திறன் கொண்ட டென்னிஸ் சியூ விளம்பர நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூரின் பலதரப்பட்ட மக்களைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்களாக இவர் இந்த விளம்பரத்தில் தோற்றமளித்து, மின் கட்டணம் அனைவராலும் செய்யக்கூடியது என்ற கருத்தை முன்வைக்கிறார்,"
"தெரியாமல் புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம். வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள், சிறிய உணவக வர்த்தக உரிமையாளர்கள் ஆகியோருக்கு அதிக செளகரியத்தை வழங்குவது இந்த விளம்பரத்திற்குப் பின்னணியிலுள்ள திட்டத்தின் நோக்கம்," என்றது மீடியாகார்ப்.

