சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தானியங்கி இடைவழி பேருந்தைச் சோதித்து வருகிறது.
இந்தச் சோதனை மே மாதம் முதல் நடந்து வருகிறது. அந்த இடைவழி பேருந்து இன்று முதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
'NUSmart இடைவழிச் சேவை' என்று அழைக்கப்படும் அந்தச் சேவையில் EZ10 ரக குட்டிப் பேருந்து ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்தை பிரான்ஸ் நாட்டின் 'ஈஸிமைல்' நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது.
அந்த இடைவழிச் சேவை ஹெங் மூய் கெங் டெர்ரஸ்-பிசினஸ் லிங்க் ஆகியவற்றுக்கு இடையில் 1.6 கி.மீ. வழித்தடத்தில் ஓராண்டு காலம் பரிசோதித்துப் பார்க்கப்படும்.
இத்தகைய ஒரு சேவையைத் தொடர்ந்து நடத்துவது வர்த்தக ரீதியில் தாக்குப்பிடிக்குமா என்பதைத் தீர்மானிப்பது அந்தச் சோதனையின் நோக்கமாகும்.
மின்சாரத்தில் ஓடக்கூடிய இந்தப் பேருந்து வார நாட்களில் முற்பகல் 10.20 மணிக்கும் 11.20 மணிக்கும் இடையில் செயல்படும்.
பிறகு பிற்பகல் 2.20 மணி முதல் 3.20 மணி வரை குட்டிப் பேருந்தில் பயணிகள் இலவசமாக ஏறிச் செல்லலாம்.
மழை பெய்தால் இந்தப் பேருந்து செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடைவழி பேருந்தின் சேவை நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்படும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ அறிவித்து உள்ளது.
பேருந்தில் 12 பேர் வரை செல்லலாம். தொடக்கத்தில் ஊழியர் ஒருவர் அதில் இருப்பார். அவர் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்.
இந்தப் பரிசோதனைக்கு சிங்கப்பூரில் டொயோட்டா வாகனங்களை விநியோகிக்கும் 'இன்ச்கேப் சிங்கப்பூர்' நிறுவனம் நிதி உதவி வழங்குகிறது. சிங்கப்பூருக்கான பிரெஞ்ச் தூதர் மார்க் அபென்சோர் நேற்று சேவையைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பரிசோதனை ஒருபுறம் இருக்க, கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் மூலம் செந்தோசாவிலும் ஜூரோங் தீவிலும் இதே போன்ற இதர இரண்டு பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
இதனிடையே, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் சுவீடன் நாட்டின் ஓல்வோ நிறுவனமும் இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் முழுமையான தானியங்கிப் பேருந்துச் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, 'எஸ்டி கைனட்டிக்ஸ்' என்ற நிறுவனம், 2020 அக்டோபர் தொடக்கத்தில் இதேபோன்ற பேருந்துச் சேவை ஒன்றைப் பரிசோதித்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

