சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் பதின்ம வயது ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டது. பத்து முதல் 19 வயது வரையிலான 19 ஆண்கள் கடந்த ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டுதான் மேற்கூறப்பட்ட வயதுப் பிரிவில் ஆக அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
2017ஆம் ஆண்டில் பதின்ம வயது ஆண்கள் எழுவர் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
கடந்த ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் 397ஆக அதிகரித்தது. 2017ல் அந்த எண்ணிக்கை 361ஆக இருந்தது.
குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் இந்த வருடாந்திர புள்ளிவிவரங்களை வெளியிட்டதையடுத்து, வயது அடிப்படையில் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை சிங்கப்பூர் அபய ஆலோசனை மன்றம் நேற்று வெளியிட்டது.
அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைத் தவிர்த்து, அனைத்து வயது பிரிவுகளிலும் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் 100,000 பேரில் உயிரை மாய்த்துக்கொள்வோரின் விகிதம் கடந்த ஆண்டு 8.36 என்ற எண்ணிக்கையாக பதிவானது. 2017ல் அந்த விகிதம் 7.74ஆக இருந்தது.
சென்ற ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்ட ஒவ்வொரு 10 பேரிலும் ஏழு பேர் ஆடவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ல் 283 ஆடவர்களும் 114 பெண்களும் உயிரை மாய்த்துக்கொண்டனர் என்று முந்தைய செய்தி ஒன்று குறிப்பிட்டது.
இளையர்களிடையே, குறிப்பாக ஆண்களிடையே உயிரை மாய்த்துக்கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பது சமுதாயத்திற்கு இருக்கக்கூடிய முக்கிய கவலைகளில் ஒன்று என்று அபய ஆலோசனை மன்றம் குறிப்பிட்டது.
பத்து முதல் 29 வயது வரையிலான இளையர்களிடையே நிகழும் மரணங்களைக் கவனிக்கும்போது அதில் உயிரை மாய்த்துக்கொள்வதே பிரதான காரணமாக தொடர்ந்து விளங்குகிறது என்று மன்றம் விவரித்தது.
கடந்த ஆண்டு 94 இளையர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
உயிரை மாய்த்துக்கொள்ளும் பதின்ம வயது பெண்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மன்றம் வெளியிடவில்லை.
"இருண்ட காலங்களில் ஆதரவு இல்லாததைப்போல உணரும் இளையர்கள், தங்களின் வலியையும் சிரமங்களையும் முடிவுக்குக் கொண்டுவர உயிரை மாய்த்துக்கொள்வதையே ஒரே வழியாக பார்ப்பது எங்களுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது," என்று அபய ஆலோசனை மன்றத்தின் மூத்த உதவி இயக்குநர் வோங் லாய் சுன் கூறினார்.

