மனித ஆற்றல் தொடர்பிலான ஐந்து அம்ச உத்தியை வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கோடிகாட்டி இருக்கிறார்.
சிங்கப்பூர் தன்னுடைய உள்நாட்டு ஊழியர் வளத்தின் தேர்ச்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வரும். நாட்டில் தலைசிறந்த மனித ஆற்றலைப் பேணி வளர்த்து வரும் என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து உலகளவில் போட்டித்திறன்மிக்க குழுக்களில் பணியாற்றக்கூடிய வல்லுநர்களை வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரவேற்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்தின் (A*Star) கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், அந்த ஐந்து அம்ச உத்தியின் மிக முக்கியமான அம்சம், உள்நாட்டு ஆற்றல் வளத்தைப் பேணி வளர்ப்பதே ஆகும் என்று குறிப்பிட்டார்.
அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வலுவான உள்ளூர் ஆற்றல் வளத்தை சிங்கப்பூர் தொடர்ந்து பலப்படுத்தும் என்று திரு சான் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் அறிவியல் வல்லுநர்கள், பொறியாளர்களில் இப்போது 70 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்களாக அல்லது நிரந்தரவாசிகளாக இருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டினார்.
இருந்தாலும் உலகளவில் செம்மையான முறையில் போட்டியிட வேண்டுமானால் அதற்கு அனைத்துலக அளவில் போட்டித்திறன்மிக்க குழுக்கள் தேவை என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் உலக வல்லுநர்களைத் தொடர்ந்து வரவேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து உலகளவில் போட்டித்திறன்மிக்க குழுக்களாகப் பணியாற்றி புத்தாக்கத் துறையில் பல முன்னேற்றங்களைச் சாதிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் வலுவான, ஆற்றல்மிக்க அதிவேக வளர்ச்சி அடைகின்ற நிறுவனங்கள் தொழில் தொடங்கி வளர்ச்சி அடைவதை ஊக்கப்படுத்த வேண்டுமானால் அத்தகைய நிறுவனங்களுக்கு அதிக திறமைவாய்ந்த சிங்கப்பூரர்கள் வேறு நாட்டவர்கள் ஊழியர்களாகக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
'உலக புத்தாக்கக் கூட்டணி', 'உலக ஆயத்தநிலை ஆற்றல் செயல்திட்டம்' போன்ற செயல்திட்டங்களுடன் சிங்கப்பூர் தொடர்ந்து உலகத்துடன் தொடர்பிலிருக்க வேண்டும் என்பது அந்த ஐந்து அம்ச உத்தியின் மற்றோர் அம்சம் என்றார் அவர்.
சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியர்களையும் தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்களையும் அது வரவேற்க வேண்டும். இணைய சமூகங்கள் மூலம் இதைச் செய்யலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

