ஜூரோங் போர்ட் நிறுவனத்தின் புதிய எண்ணெய்த் தொட்டி முனையங்களின் முதல் கட்டம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஜூரோங் போர்ட் நிறுவனத்திற்கும் 'ஆயில்டேங்கிங்' என்ற ஜெர்மனி நிறுவனத்துக்கும் இடைப்பட்ட கூட்டுத்தொழிலாக அந்த $140 மில்லியன் முனையம் 14 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கிறது.
அந்த முனையத்தில் உள்ள தொட்டிகளில் 252,000 கனமீட்டர் தூய்மையான பெட்ரோலியத்தை வைக்கலாம்.
முனையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்த வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட், இந்தப் புதிய முனையம் காரணமாக சிங்கப்பூர், குறைந்த அளவு கந்தகத்தைக் கொண்டுள்ள எண்ணெயை கப்பல்களுக்கு நிரப்பும் உலகின் தலைசிறந்த துறைமுகங்களில் ஒன்று என்ற தன் நிலையைப் பலப்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்தார்.
கப்பல்கள் 0.5 விழுக்காட்டுக்கும் அதிக கந்தகத்தைக் கொண்டிருக்கும் எரிஎண்ணெயை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பயன்படுத்த முடியாது என்று அனைத்துலக கடல்துறை நிறுவனம் கட்டுப்பாடு விதித்து இருக்கிறது.
புதிய முனையம், தூய்மையான பெட்ரோலியப் பொருட்களைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்றார் திரு சீ.
இந்தப் புதிய எண்ணெய்த் தொட்டி முனையங்கள் ஆழ்கடல் துறைகளையும் சிறப்பு வசதிகளுடன் கூடிய படகுத்துறைகளையும் கொண்டிருப்பதால் சுமார் 160,000 டன் எண்ணெய்யைச் சுமந்து செல்லக்கூடிய பெரும் எண்ணெய்க் கப்பல்களும் துறைமுகத்திற்கு வரமுடியும் என்றாரவர்.
ஜூரோங் தீவின் பெட்ரோலிய மற்றும் பெட்ரோலிய ரசாயனக் கட்டமைப்பு வசதிகளுடன் நேரடியான குழாய் தொடர்புகளும் இருப்பதால் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் 30 விழுக்காடு மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் புதிய முனையத்தின் முதல்கட்ட எண்ணெய்த் தொட்டி கொள்ளளவு அனைத்தையும் 'பெட்ரோசைனா' என்ற சீன நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் எடுத்துக்கொண்டுவிட்டதாக ஜூரோங் போர்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஊய் பூன் ஹொவ் தெரிவித்தார்.
இந்த முனையத்தின் இரண்டாம் பகுதி திறக்கப்பட்டதும் கூடுதலாக 310,000 கன மீட்டர் தூய்மையான பெட்ரோலியத்தை வைப்பதற்கான வசதி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் கட்ட திட்டம் தொடர்பில் ஜூரோங் போர்ட் நிறுவனம் மும்முரமான விவாதிப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

