அனைத்துலக ஒப்பனை நிறுவனமான செஃபோராவின் வாடிக்கையாளர்களுடைய கணினித் தகவல்கள் அம்பலமாகி இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டு இருக்கிறது.
இதனால் சிங்கப்பூரிலும் இதர பல நாடுகளிலும் உள்ள அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் செஃபோரா 12 நிலையங்களை நடத்துகிறது. அந்த நிறுவனம் தன்னுடைய இணைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. கடந்த இரண்டு வார காலத்தில் கணினித் தகவல்களில் அத்துமீறல்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று அந்த அறிவிப்பு தெரிவித்தது.
பெயர், பிறந்த தேதி, பால், மின்னஞ்சல் முகவரி, ரகசிய எண்கள் போன்ற பிரத்தியேக தகவல்கள் அங்கீகாரம் இல்லாத மூன்றாம் தரப்புகளுக்குத் தெரியவந்திருக்கக் கூடும் என்று அந்த நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான நிர்வாக இயக்குநர் அலியா கோகி நேற்று மின்னஞ்சலில் நிறுவன வாடிக்கை யாளர்களுக்குத் தெரிவித்தார்.

