சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் மேம்படுகிறது

சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் மேம்படுகிறது

2 mins read
2f781985-203c-400f-ae9c-79ebb1f2cff2
சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் மேம்பட்டு வருகிறது என்று கொள்கை ஆய்வுக் கழகம் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரர்களின் நண்பர் வட்டம் மாறியுள்ளது. தற்போது அதிகமான சிங்கப்பூரர்கள், மற்ற இனத்தவர்களை மிக நெருக்கமான நண்பர்களாகக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்ற சமய, இனத்தைச் சேர்ந்தவர்கள் மீதான நம்பிக்கையும் சிங்கப்பூரர்களிடையே அதிகரித்துள்ளது.

குடிமக்கள், நிரந்தரவாசிகள் தொடர்பான ஆய்வு இதனை தெரிவிக்கிறது.சிங்கப்பூரில் இன, சமயங்களுக்கு இடையே நல்லிணக்கம் மேம்பட்டுள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொள்கை ஆய்வுக் கழகம் மேற்கொண்ட இனம், சமயம், மொழி தொடர்பான ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டன.

இதற்கு OnePeople.sg ஆதரவு அளித்திருந்தது.

சிங்கப்பூரில் சமய, இனங்களுக்கு இடையிலான உறவு பொதுவாகவே நல்ல முறையில் மேம்பட்டுள்ளதை ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பெரும்பாலானோர் சமய வேற்றுமையை ஏற்றுக் கொண்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. "மேலும் பொது இடங்களில் மிகவும் குறைவான அளவில் அல்லது சிறிதுகூட பாகுபாடு இருந்ததில்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். இது, சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்துக்கான முக்கிய அறிகுறி," என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரிக்கும் ஆகஸ்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 4,015 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பத்து துறைகளில் இன, சமயம் தொடர்பான தங்களுடைய கருத்துகளை பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

இதேபோன்ற ஆய்வு 2013ல் மேற்கொள்ளப்பட்டது. முன்னைய ஆய்வுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டின் ஆய்வில் அதிகமான சிங்கப்பூரர்களுக்கு மற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் நெருக்கமான நண்பர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

2013ன் ஆய்வில் பங்கேற்ற சீனர்களுக்கு 23 விழுக்காடு நெருக்கமான மலாய் நண்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டின் ஆய்வில் இந்த விகிதம் 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதேபோன்று 2013ஆம் ஆண்டின் ஆய்வில் பங்கேற்ற 63 விழுக்காடு இந்தியர்கள் தங்களுக்கு சீன நண்பர்கள் நெருக்கமாக இருந்ததாகத் தெரிவித்தனர்.

அண்மைய ஆய்வில் இந்த விழுக்காடு 77.2க்கு அதிகரித்துள்ளதாக கொள்கை ஆய்வு கழகம் தெரிவித்தது.