கைபேசிகளைத் தயாரிக்கும் ஹுவாவெய் சீன நிறுவனம் தொழில்துறை வழிகாட்டிகளை அத்துமீறியதா என்பது குறித்து சிங்கப்பூர் விளம்பர தரநிர்ணய ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தேசிய தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் விற்கும் 'Huawei Y6 Pro' கைபேசிகளுக்கு 50 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சிறப்புச் சலுகைகளை அறிவித்தது. அதைத் தொடர்ந்து இங்குள்ள ஹுவாவெய்யின் 27 கிளைகளில் கைபேசிகளை வாங்க கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். வழக்கமாக $198க்கு விற்பனையாகும் அந்தக் கைபேசிகளின் விலை $54ஆக குறைக்கப்பட்டது.
ஆனால் சில கடைகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே கைபேசிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஹுவாவெய் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். பெரும்பாலும் முதியவர்களாக இருந்த வாடிக்கையாளர்கள், இதனால் சினமடைந்தனர்.
இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் விளம்பர தரநிர்ணய ஆணையம், ஹுவாவெய்யின் இந்தச் சிறப்புச் சலுகை குறித்து தனக்கு 10 புகார்கள் கிடைத்திருப்பதாகக் கூறியது.
சிங்கப்பூர் விளம்பர நடைமுறை குறியீட்டு வழிகாட்டிகளுக்கு உட்பட்டு ஹுவாவெய் நிறுவனம் செயல்பட்டதா என்பது குறித்து மதிப்பிட அந்நிறுவனத்தைத் தான் தொடர்புகொண்டிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
அந்த வழிகாட்டுதல்களின்படி, விளம்பரம் மூலம் எழுந்துள்ள தேவையைப் பூர்த்திசெய்ய போதுமான எண்ணிக்கையில் பொருட்களைத் தாங்கள் இருப்பில் வைத்திருப்பதை விளம்பரதாரர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இந்நிலையில், வான்பாவ் சீன நாளிதழிலும் இணையத்திலும் கைபேசிகளைத் தான் விளம்பரப்படுத்தியதாகக் கூறிய ஹுவாவெய், இருப்பு இருக்கும் வரையே கைபேசிகள் விற்கப்படும் என விளம்பரத்திற்குக் கீழ் சிறிய எழுத்துகளில் வாசகம் இடம்பெற்று இருந்ததாக விளக்கம் அளித்தது.

