விபசார விடுதி நடத்திய ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனையாக மாற்றியது.
சான் லை சியானின், 55, சூழ்நிலையை ஆராய்ந்ததில் 35 வயது வில்லியம் டியா ஹங் வாய்யைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்பது தெரிய வருவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு கூறியது.
கடந்த 2017ஆம் ஆண்டில் மரணம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்குடன் கொலை குற்றம் புரிந்ததாக சான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் திரு டியாவின் உடலில் காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சான் செயல்பட்டதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியது.
அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
2014 ஜனவரி 14ஆம் தேதி 6,500 வெள்ளி காணாமல் போனதால் டியா மீது சானுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் லோரோங் 18 கேலாங்கில் உள்ள தனது விபசார விடுதிக்கு டியாவை வரவழைத்து சான் விசாரித்தார்.
டியாவை கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ள சான் முயற்சி செய்தார். ஆனால் பணத்தை எடுக்கவில்லை என்று டியா மறுத்தபோதும் அவரது தலையில் உலோகக் கழியால் சான் பலமுறை தாக்கினார். இதில் டியா சுயநினைவை இழந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சான் ஒரு வாரத்திற்குப் பிறகு மரணமடைந்தார்.
பிரேதப் பரிசோதனையில் பத்து முறை சானின் தலையில் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

