சிங்கப்பூரில் பல இன, சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மேம்பட்டு வருவதை கொள்கை ஆய்வுக் கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் காட்டினாலும் ஒரு கவலைக்குரிய அம்சத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஏறக்குறைய அறுபது விழுக்காடு மலாய்க்காரர்களும் 56 விழுக்காடு இந்தியர்களும் வேலையிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக உணர்கின்றனர்.
இது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 58.7 விழுக்காடு மலாய்க்காரர்கள், 52.6 விழுக்காடு இந்தியர்களின் எண்ணத்தோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம்.
வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது பதவி உயர்வை எதிர்பார்க்கும்போது இந்த பாகுபாட்டை உணர்வதாக சிறுபான்மை இனத்தவர்கள் கூறியுள்ளனர்.
உதாரணமாக, கடந்த ஆண்டில் சில சமயம் அல்லது எப்போதும் பாரபட்சம் காட்டப்படும் உணர்வு ஏற்பட்டதாக 51.6 விழுக்காடு மலாய்க்காரர்கள் கூறிருந்தனர்.
இது, 2013ஆம் ஆண்டின் ஆய்வுடன் ஒப்பிடுகையில் 47.3 விழுக்காட்டிலிருந்து அதிகரித்துள்ளது.
2018ஆம் ஆண்டின் ஆய்வில் 47 விழுக்காடு இந்தியர்களும் இதேபோன்று பாரபட்சம் காட்டப்பட்ட உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். சீனர்களில் 12 விழுக்காட்டினரும் இதேபோன்று உணர்கின்றனர்.

