கோ சோக் டோங்கின் பெயரில் தில்லு முல்லு செய்யும் முதலீட்டு இணையத்தளம்

கோ சோக் டோங்கின் பெயரில் தில்லு முல்லு செய்யும் முதலீட்டு இணையத்தளம்

1 mins read
033c0fff-fd11-4200-a567-b50838908e94
-

ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கின் பெயரைப் பயன்படுத்தி மின்னிலக்க நாணயத்திற்கான முதலீடுகளைச் சேகரிக்க முயலும் இணையத்தளம் ஒரு மோசடி என்றும் மற்றவர்களைத் தவறாகத் திசைத்திருப்பக்கூடியது என்றும் சிங்கப்பூரின் நாணய ஆணையம் தெரிவித்தது. திரு கோ சொல்லாத சில வாக்கியங்களை அவர் சொல்லியதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டது பற்றி அறிவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியது.

'பிட்காயிண் லூப்ஹோல்' என்ற தளத்தில் குறைந்தபட்சமாக 250 வெள்ளி வைப்புத் தொகையைச் செலுத்த அந்த இணையத்தளம் வாசகர்களைக் கேட்டுக்கொண்டது. அத்துடன் கடன்பற்று அட்டை மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களைத் தன்னிடம் வழங்குமாறு அந்த இணையத்தளம் வாசகர்களைக் கேட்டது. அந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள வாக்கியங்கள் பொய்யானவை அல்லது மற்றவர்களைத் தவறாக திசைத்திருப்பும் நோக்கத்தில் திரிக்கப்பட்டவை என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.

கடந்த ஓர் ஆண்டில் இதுபோலவே அமைச்சர்களின் பெயரை நேர்மையற்ற முறையில் பயன்படுத்தி முதலீடுகளைக் குவிக்க சில இணையத்தளங்கள் முற்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

இது தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தங்களது தனிப்பட்ட விவரங்களை அந்த இணையத்தளத்திற்கு வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் நாணய ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.

ஏதேனும் ஒரு முதலீட்டுடன் தில்லுமுல்லு அல்லது மற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டிருப்பதை அறியும் பொதுமக்கள் உடனே போலிசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.