இவ்வாண்டு பிற்பாதியில் உற்பத்தித்துறையினருக்கு இடையே வர்த்தக வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளன. அனைத்துலக வர்த்தகப் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில் அவர்களது எதிர்பார்ப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான தனது கருத்தாய்வில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூலை மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையே வர்த்தக வளர்ச்சி மெதுவடையும் என்று உற்பத்தியாளர்களில் 22 விழுக்காட்டினர் தெரிவித்தனர். உற்பத்தியாளர்களில் 11 விழுக்காட்டினர் மட்டுமே வர்த்தக நிலைமை முன்னேறும் என்று எதிர்பார்க்கின்றனர்.
மேலும், உற்பத்தித்துறையினரில் 11 விழுக்காட்டினர் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் வர்த்தகச் சூழல் நலிந்து வரும் என்று கருதுவதாக பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த விகிதம் கடந்த ஆண்டின் 7 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.
சிங்கப்பூர் பொருளியலில் உற்பத்தித்துறை ஐந்தில் ஒரு பங்கை வகிக்கிறது. உலக வர்த்தக மோதல், சீனாவில் மெதுவடையும் வளர்ச்சி மற்றும் பகுதி மின்கடத்திகளின் உற்பத்திச் சுழலின் முதிர்ச்சி ஆகியவற்றால் அத்துறை நிச்சயமற்ற சூழலுக்கு உள்ளாகிறது. சேவைத்துறையில் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், இவ்வாண்டின் பிற்பகுதியில் சேவை நிறுவனங்கள் தங்கள் வர்த்தக எதிர்பார்ப்புகளை மிதப்படுத்திக்கொண்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

