'பிட்காயின்' எனப்படும் மின்னிலக்க நாணய முதலீட்டை ஊக்குவிக்கும் மோசடி இணையப்பக்கம் குறித்து பொதுமக்களுக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தெரிவித்துள்ளதாகக் கூறி அந்த இணையப்பக்கத்தில் பொய்யாக வெளியிடப்பட்ட கருத்துகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் முதலீடுகளைச் செய்ய ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கருத்துகள் பொய்யானவை அல்லது தவறான முறையில் சித்திரிக்கப்பட்டவை என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
'பிட்காயின் லூப்ஹோல்' எனக் கூறப்படும் மின்னியல் வர்த்தகத் தளம், குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகையாக $250 முதலீடு செய்யும்படி வாசகர்களிடம் கோருகிறது.
பின்னர், அவர்களது சார்பில் தானியக்க முறையில் வர்த்தகம் தொடங்கப்படும் என அது குறிப்பிடுகிறது. கடன்பற்று அட்டை அல்லது வங்கிக் கணக்கு விவரங்களையும் அது கேட்கிறது.
இந்நிலையில், இணையத்தில் மிகவும் கவனமாக இருக்கும்படியும் இணையப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் எவ்வித நிதி அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியது.
ஒரு முதலீடு மோசடியானதாக இருக்கக்கூடும் அல்லது மற்ற சட்டவிரோத நடவடிக்கை களுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் போலிசிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

