ஓசிபிசி வங்கியின் வாடிக்கையாளர்கள் இனிமேல் வங்கி அட்டையின்றி கியூஆர் குறியீட்டின் மூலம் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
தீவு முழுவதும் உள்ள பெரும்பாலான ஓசிபிசி பணம் பெறும் இயந்திரங்களில் வங்கி அட்டையின்றிப் பணத்தை எடுக்கும் வசதியை வழங்கும் முதல் வங்கி ஓசிபிசிதான் என்று வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது.
'ஓசிபிசியின் பே எனிவான்' திறன்பேசி செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் கியூஆர் குறியீட்டை வருடிக்கொண்டு தனது அடையாளத்தை விரல்ரேகை, முகரேகை அல்லது இணைய வங்கி மறைச்சொல் வழியாக உறுதி செய்யலாம் என்றது ஓசிபிசி.
'பிண்' எனப்படும் ரகசிய எண்களைக் காட்டிலும் கியூஆர் குறியீடு ஆக பாதுகாப்பானது என்கிறது ஓசிபிசி. அங்க அடையாளக் கூறுகளைப் பயன்படுத்தும் அம்சங்கள் கியூஆர் குறியீட்டு முறையில் உள்ளடங்குவது இதற்கான காரணம் என அந்த வங்கி கூறுகிறது. மேலும் 'பிண்' எண்கள் திருடப்படலாம் என்றும் அது சொல்கிறது.
வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையை, சில்லறை வைப்புகளை ஏற்கும் 22 புதிய தானியக்க வங்கி இயந்திரங்களைத் தவிர இதர ஓசிபிசி தானியக்க இயந்திரங்களில் பயன்படுத்தலாம்.

