புதிய வீவக பேட்டைகளில் வசிக்கும் சுமார் 18,000 பேருக்கு இக்கியா நிறுவனத்திடம் இருந்து மறுசுழற்சி குப்பைத்தொட்டியை இலவசமாகப் பெறுவதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
அதிகமான குடும்பங்கள் மறுசுழற்சிப் பொருட்களை அதிகம் பயன்படுத்த ஊக்கமூட்ட தேசிய சுற்றுப்புற வாரியமும் இக்கியா சிங்கப்பூர் நிறுவனமும் இந்தக் கூட்டுத் திட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இக்கியா வழங்கும் இந்தக் குப்பைத்தொட்டி பல நாட்கள் உழைக்கக்கூடியவை. அவற்றைக் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
மறுசுழற்சி செய்யக்கூடிய 60 விழுக்காட்டு பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அந்தத் தொட்டிகளில் குடியிருப்பாளர்களுக்கு உதவும் பல விவரங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
இந்தத் தொட்டியில் சாப்பாட்டுப் பொருட்கள், திரவங்களைப் போடாமல் போத்தல்களையும் டப்பாகளையும் போட்டு அவற்றை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தலாம்.
இதில் சேகரிக்கும் பொருட்கள் பின்னர் பெரிய மறுசுழற்சி தொட்டியில் சேர்க்கலாம்.
மெக்பர்சன், பிடாடரி, செம்பவாங், செங்காங் போன்ற புதிய வீவக பாக்கங்களில் உள்ள பிடிஓ வீடுகளின் குடியிருப்பாளர்கள் இதற்குத் தகுதி பெறுவார்கள்.
தெம்பனிஸ், அலெக்சாண்டிராவில் இருக்கும் இக்கியா கிளைகளில் அவர்கள் பற்றுச் சீட்டுகளைப் பெறலாம்.
மேலும் மறுபுழக்க பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தவும் அத்தகைய பொருட்களை முறையாக வகைப்படுத்தி வெளியேற்றவும் பொதுமக்களுக்கு இந்த வாரியம் தொடர்ந்து ஊக்கமூட்டும் என்று வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் மெங் டுய் தெரிவித்து உள்ளார்.

