தன் நலன்களைத் தானே காக்க ஆசியான் திட்டம்

தன் நலன்களைத் தானே காக்க ஆசியான் திட்டம்

3 mins read

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இந்த வட்டாரத்தில் போட்டாபோட்டி ஏற்பட்டு இருக்கும் சூழலில் ஆசியான் தன்னுடைய நலன்களை தனது சொந்த வழியில் பாதுகாக்க திட்டமிடுகிறது.

ஒளிவுமறைவு இல்லாத நிலை, எல்லாரையும் உள்ளடக்கும் தன்மை, அமைதி ஆகியவற்றுக்குத் தோள்கொடுத்து அதன்மூலம் ஆசியான் தன் நலன்களைக் காக்க திட்டமிடுகிறது என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

இந்த அணுகுமுறையில் ஏதாவது ஒரு வல்லரசின் நலன்களுக்கு பாதிப்பு என்றாலும்கூட ஆசியான் தன் சொந்த வழியில் தன் நலன்களைப் பாதுகாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர், பேங்காக்கில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் கூடிய ஆசியான் வெளியறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மின்னிலக்கப் புரட்சியால் ஏற்படக்கூடிய புதிய சவால்களைச் சமாளிக்க ஒத்துழைப்பை அதிகப்படுத்தும்படி ஆசியான் நாடுகளையும் அதனுடைய பங்காளி நாடுகளையும் சிங்கப்பூர் வலியுறுத்தி இருக்கிறது.

இணையப் பாதுகாப்பில் அணுக்க ஒத்துழைப்பைப் பேணி வளர்க்கும்படி அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று வலியுறுத்தினார்.

இணையப் பாதுகாப்பு தொடர்பில் இப்போது ஆசியான் நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக ஆசியான்-சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு உன்னத நிலையம் அமைய இருக்கிறது.

அந்த நிலையத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்படி டாக்டர் விவியன் ஆசியான் நாடுகளையும் அதன் பங்காளி நாடுகளையும் கேட்டுக்கொண்டார்.

அறிவார்ந்த நகர் மேம்பாட்டில் அணுக்கப் பங்காளித்துவ உறவை உருவாக்கும்படி அமைச்சர் அழைப்பு விடுத்ததாக வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஆசியான் அறிவார்ந்த நகர் கட்டமைப்புத் திட்டம் அனுபவங்களையும் ஆற்றல்களையும் பகிர்ந்துகொள்ள ஊக்கமூட்டுகிறது.

நகரமயமாக்கத்தில் ஏற்படக்கூடிய சவல்களைப் புத்தாக்க தொழில்நுட்பங்கள் மூலம் சமாளித்து ஆசியான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அந்தக் கட்டமைப்பின் நோக்கம்.

பேங்காக்கில் ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திற்கு டாக்டர் விவியன் இணை தலைமை தாங்கினார்.

ஆசியான் நாடுகள் சார்பில் அவர் ஆசியான் பொது அறிக்கையை அந்தக் கூட்டத்தில் வாசித்தார்.

இரு தரப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் பலதுறை பங்காளித்துவ உறவை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.

பொதுவான சவால்களைச் சமாளிப்பதில் அணுக்க ஒத்துழைப்பைப் பேணி வளர்க்க ஆசியான்-ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் மறுஉறுதி அளித்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தோடும் ஆசியான் நாடுகளோடும் சேர்ந்து ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய ஈடுபாட்டை ஆழப்படுத்த சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டை அமைச்சர் மறுஉறுதிப்படுத்தினார்.

இதனிடையே, அணி சேரும்படி ஆசியப் பசிபிக் நாடுகளை அமெரிக்கா ஒருபோதும் கேட்டுக்கொண்டதில்லை என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தென் கிழக்கு ஆசிய நாடுகளிடம் கூறினார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வட்டார போட்டாபோட்டி அதிகரித்து வரும் நிலையில், ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கும் உலக வல்லரசு நாடுகளின் அமைச்சர்களுக்கும் இடையில் பாதுகாப்புக் கூட்டம் பேங்காக்கில் நேற்று நடந்தது.

"அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம் அணி சேர்ந்துகொள்ளுங்கள் என்று ஆசிய பசிபிக் நாடுகளை அமெரிக்கா ஒருபோதும் கேட்டதில்லை.

"ஆசியான் நாடுகளுடன் பங்காளித்துவ உறவையே அமெரிக்கா காலாகாலமாக கைக்கொண்டு வந்துள்ளது. ஒரு நாடு மற்றொரு நாட்டின் சுயாதிபத்திய உரிமையை மதித்து நடக்கவேண்டும்.

"அடிப்படை விதிகள், மனித உரிமைகள், பொருளியல் வளத்துடன் இயற்கை வளத்தையும் கட்டிக்காத்து வளர்ச்சியை சாதிப்பது ஆகியவை அமெரிக்காவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடைப்பட்ட உறவுக்கு வழிகாட்டி வந்துள்ளன," என்றாரவர்.