தானியங்கிச் சேவைகளுடன் 6 போலிஸ் சாவடிகள் திறப்பு

தானியங்கிச் சேவைகளுடன் 6 போலிஸ் சாவடிகள் திறப்பு

2 mins read
f9c7877d-d633-4d8c-8c55-7c114fb19bc2
மறுவடிவம் பெற்றுள்ள போலிஸ் சாவடிகளில் தொடுதிரை கணினிக்கூடங்கள் அமைந்துள்ளன. 24 மணி நேரமும் அவற்றில் பொதுமக்கள் போலிஸ் சேவைகளைப் பெறலாம். படம்: மரீன் பரேடு ேபாலிஸ் சாவடி/ஃபேஸ்புக் -

ஆறு அக்கம்பக்க போலிஸ் சாவடிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. கம்போங் கிளாம், ஆயர் ராஜா, சோங் பாங், மரீன் பரேடு, தெம்பனிஸ் ஈஸ்ட், சுவா சூ காங் ஆகிய அந்த ஆறு சாவடிகளும் சுமார் ஓராண்டு காலம் மூடப்பட்டு இருந்தன.

புதுப்பிக்கப்பட்ட சாவடிகளில் தானியக்கமய சேவைகளைப் பொதுமக்கள் பெறலாம் என்று போலிஸ் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. அந்தச் சாவடிகளில் உள்ள சுய உதவி தொடுதிரை கணினிக் கூடத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் போலிஸ் சேவையைப் பெறமுடியும்.

குற்றச்செயல்களைப் பற்றி தெரியப்படுத்தலாம். காணாமல் போயிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஒப்படைக்கலாம். உரிமங்கள், அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று போலிஸ் தெரிவித்து இருக்கிறது.

இருந்தாலும் அந்த நவீன அக்கம்பக்க போலிஸ் சாவடிகளில் முகவரி மாற்றத்தை அல்லது பிறப்பு, இறப்பை பதிய முடியாது.

புதிய சாவடிகளில் கிடைக்காத சேவைகளை இதர அக்கம் பக்க போலிஸ் நிலையங்களில் பெறலாம். இந்த ஆறு சாவடிகளையும் சேர்த்து மொத்தம் 15 அக்கம்பக்க போலிஸ் சாவடிகள் மறுவடிவம் பெற்று இருக்கின்றன.

இதனால் போலிஸ் அதிகாரிகள் களப்பணிகளில் அதிகம் ஈடுபட முடியும். முழு தானியங்கி சேவைகளுடன்கூடிய முதல் அக்கம்பக்க போலிஸ் சாவடிகள் 2013ல் அறிமுகப்படுத்தப்பட்டன.

வெஸ்ட் கோஸ்ட், ராடின் மாஸ், மார்சிலிங் ஆகிய அந்த மூன்று சாவடிகளும் பொதுமக்களுக்குச் சேவையாற்றி வருகின்றன.

இந்தச் சாவடிகள் ஒருபுறம் இருக்க, குடியிருப்பாளர்கள் http://www.police.gov.sg/e-services என்ற முகவரி மூலம் அவசரமற்ற விவகாரங்களைப் பற்றி போலிசிடம் தெரியப்படுத்தலாம். அவசர போலிஸ் உதவி தேவைப்படுவோர் உடனடியாக 999 எண்ணை அழைக்க வேண்டும்.