மின்னிலக்க வங்கிகள் வருகையை சிங்கப்பூரில் வங்கி பயனீட்டாளர்கள் வரவேற்கிறார்கள். இவர்களில் இளம் வாடிக்கையாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.
'ஜேடி பவர்' (JD Power) என்ற அனைத்துலக சந்தைத் துறை தகவல் சேவை நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரிய வருகிறது.
இந்த ஆண்டில் மொத்த வாடிக்கையாளர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினர், மின்னிலக்க வங்கிக் கணக்குகளைத் திறப்பதில் நாட்டமாக இருந்தனர்.
சென்ற ஆண்டில் இது 52 விழுக்காடாக இருந்தது. கடந்த 1980ல் அல்லது அதற்குப் பிறகு பிறந்த இளம் வாடிக்கையாளர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் மின்னிலக்க வங்கிகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
இதர வாடிக்கையாளர்களில் 59 விழுக்காட்டினர் மின்னிலக்க வங்கிக் கணக்கைத் திறக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
வாடிக்கையாளர்களின் இந்த மனப்போக்கு காரணமாக வழிவழியான முறைகளில் செயல்பட்டு வரும் வங்கிகள் மாறிக்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஜேடி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய சம்பளத்தை வங்கிக் கணக்கில் போடும்போது அவர்களுக்குக் கூடுதல் வட்டியைக் கொடுக்கின்ற சிறப்பு சேமிப்புத் திட்டங்களில் ஏறக்குறைய பாதி வாடிக்கையாளர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தக் கணக்குகளின் மூலம் வங்கிகள் புதிய நிதிகளைக் கவர்கின்றன. அதோடு முக்கியமாக அவை தங்கள் வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இத்தகைய கணக்குகள் வழிவகுக்கின்றன என்று ஜேடி பவர் நிறுவனம் குறிப்பிடுகிறது.
இதனிடையே, கையடக்கச் சாதன வங்கிச் செயலிகளின் பயனீடு அதிகரித்து இருக்கிறது. 2018ல் 53 விழுக்காடாக இருந்த இந்தப் பயனீட்டு அளவு 2019ல் 65 விழுக்காடாக ஆகி இருக்கிறது.
வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் இந்த ஆண்டு கொஞ்சம் கூடி இருக்கிறது. இதில் எச்எஸ்-பிசி (HSBC) வங்கி முதலிடத்தைப் பெறுகிறது.

